மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2024இற்கான அதன் இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. இவ்வறிக்கையின் உள்ளடக்கமானது 2024 யூலை மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பொருளாதாரம் தொடர்பாக குறிப்பாக, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன தொடர்பில் முன்னோக்கிய பார்வையிலமைந்த நோக்குகளை நாணயக் கொள்கை அறிக்கை வழங்குகின்றது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய துறைகளின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன மீதான எறிவுகளிற்கான இடர்நேர்வுகளின் மதிப்பீடொன்றினை வழங்குவதனையும் அறிக்கை நோக்காகக் கொண்டுள்ளது. இவ்வறிக்கையினூடாக, மத்திய வங்கி அதன் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களின் பின்னணியிலுள்ள நியாயபூர்வதன்மையினைத் தொடர்பூட்டுவதனூடாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும்தன்மை என்பவற்றை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.