கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 ஏப்பிறலில் சிறு அதிகரிப்பினைக் காண்பித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 மாச்சின் 0.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஏப்பிறலில் 1.5 சதவீதமாகப் பதிவாகி சிறு அதிகரிப்பொன்றினைக் காண்பித்தது.

உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2024 மாச்சின் 3.8 சதவீதத்திலிருந்து 2024 ஏப்பிறலில் 2.9 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. எவ்வாறியிருப்பினும், உணவல்லா வகையானது 2024 மாச்சில் அவதானிக்கப்பட்ட 0.5 சதவீதப் பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஏப்பிறலில் 0.9 சதவீதம் கொண்ட பணவீக்கத்தைப் (ஆண்டிற்கு ஆண்டு) பதிவுசெய்தது. மாதத்திற்கு மாதம் என்ற அடிப்படையில் பணவீக்கமானது தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. உணவு வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.32 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளினதும் உணவல்லா வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.47 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளினதும் காரணமாக  கொ.நு.வி.சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2024  ஏப்பிறலில் -0.79 சதவீதமாகப் பதிவாகியது. அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2024 மாச்சின் 3.1 சதவீதத்திலிருந்து 2024 ஏப்பிறலில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

காலாண்டு சராசரிப் பணவீக்கமானது 2024 மாச்சு எதிர்வுகூறல் சுற்றின் போது தீர்மானிக்கப்பட்ட மத்திய வங்கியின் நடுத்தரகால எறிவுகளுக்கு இசைவாகக் காணப்பட்டதுடன் மாதாந்தப் பணவீக்கத் தரவுகள் எறிவுப்பாதையினை மீளவலுப்படுத்துகின்றன. பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மூலம் துணையளிக்கப்பட்டு, எதிர்வரும் காலப்பகுதியில் 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தை அண்மித்து பணவீக்கம் நிலைநிறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

முழுவடிவம்

Published Date: 

Tuesday, April 30, 2024