இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2024 மாச்சு 25ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.50 சதவீதத்திற்கும் 9.50 சதவீதத்திற்கும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்குத் தீhமானித்தது. நடுத்தரகாலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்டமட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதை இயலச்செய்வதற்கு தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார அபிவிருத்திகள் பற்றிய விரிவான மதிப்பீடொன்றினைத் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில் சபையானது ஏனையவற்றிற்கு மத்தியில், குறைவடைந்த கூட்டுக் கேள்வி நிலைமைகள், வரிக்கட்டமைப்பிற்கான அண்மைய  மாற்றங்களின் பணவீக்கம் மீதான எதிர்பார்க்கப்பட்டதைக்காட்டிலும் குறைவான தாக்கம், மின்சாரக் கட்டணங்களுக்கான அண்மைய சரிப்படுத்தல் காரணமாக சாதகமான அண்மைக்கால பணவீக்க இயக்கவாற்றல்கள், மிகவும் நிலைநிறுத்தப்பட்ட எதிர்பார்க்கைகள், மிதமிஞ்சிய வெளிநாட்டுத் துறை அழுத்தங்கள் இல்லாமை, சந்தை வட்டி வீதங்களில் கீழ்நோக்கிய போக்கினைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தேவை என்பன பற்றி சபை கருத்திற்கொண்டது. பொருளாதார நடவடிக்கையானது நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்கு சாரசரிக்கு கீழ் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளமையினால், அண்மைய காலத்தில் பணவீக்கத்திற்கான சாத்தியமான இடர்நேர்வுகள் நடுத்தரகால பணவீக்கத் தோற்றப்பாட்டில் முக்கிய மாற்றத்தினைக் கொண்டிருக்காது என சபை அவதானத்தில் கொண்டது. நாணயச் சபையானது நாணயத் தளர்த்தல் வழிமுறைகளின் விரிவான மற்றும் முழுமையான ஊடுகடத்தலுக்கான, குறிப்பாக நிதியியல் நிறுவனங்கள் மூலமான கடன்வழங்கல் வீதங்களுக்கும் இதனூடாக வரவிருக்கும் காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்கள் இயல்புநிலைக்குத் திரும்புவதைத் துரிதப்படுத்துவதற்குமான தேவையினை வலியுறுத்தியது.   

முழுவடிவம்

Published Date: 

Tuesday, March 26, 2024