இலங்கை மத்திய வங்கி “மத்திய வங்கி உங்களிடம் வருகின்றது” என்ற தலைப்பிலான அதன் முதலாவது முழுநாள் நிகழ்ச்சித்திட்டத்தினை 805, திருகோணமலை வீதி, மண்தண்டாவல, மாத்தளை என்ற முகவரியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தில் 2017 மே 5ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்றும் 6ஆம் நாள் சனிக்கிழமையன்றும் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 8.00 மணிவரை நடத்தவுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம், பொதுமக்கள் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஊ.சே. நிதியம், சேதமடைந்த நாணயத் தாள்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல், நாணயக் குத்திகளை வழங்குதல், நாணய அரும்பொருட்காட்சிச்சாலை இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளை விற்பனைப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் கடன் திட்டங்கள் போன்றவற்றுடன் தொடர்பான பணிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் மூத்த முகாமைத்துவத்தினருடன் பரஸ்பரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இயலுமைப்படுத்துவதாகும்.
செலாவணிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள், பிரமிட் திட்டங்கள், அதிகாரமளிக்கப்படாத நிதியியல் வியாபாரங்கள், நுண்பாக நிதிக் கம்பனிகள் போன்ற கரிசனைக்குரிய விடயங்களில் கூட்டத் தொடர்கள் இடம்பெறும்.
கொடுகடன் தகவல் பணியகம் மற்றும் கொடுகடன் ஆலோசனை மையம் என்பனவற்றின் பணிகளும் கிடைக்கத்தக்கதாக இருக்கும். இங்கு உரிமம் பெற்ற வங்கிகளும் இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் உதவி வழங்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாண்மையாளர்கள் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான விற்பனை நிலையங்களையும் கொண்டிருப்பர்.
மேலும், இலங்கை மத்திய வங்கி சிங்கள மற்றும் தமிழ்மொழிகளில் பொருளாதாரத்தினை ஒரு பாடமாகக் கொண்டு கல்வி பயிலும் க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்காக கல்வி நிகழ்ச்சித்திட்டங்களையும் நிதியியல் அறிவு, நுண்பாக நிதி ஒழுங்குகள், போலி நாணயத் தாள்களைக் கண்டறிதல், அரச படுகடன் முகாமைத்துவம் ஆகிய விடயங்களிலமைந்த கூட்டத்தொடர்கள் உட்பட மத்திய வங்கித் தொழிற்பாடுகள் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்தும்.