நிதியியல் துறை பாதுகாப்புவலை வலுப்படுத்தல் செயற்றிட்டத்தினூடாக (Financial Sector Safety Net Strengthening Project) நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் இலங்கைக்கு ஐ.அ.டொலர் 150 மில்லியனை நிதியிடுவதற்கு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அதேவேளை, உலக வங்கிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான செயற்றிட்ட உடன்படிக்கையானது செயற்றிட்ட நடைமுறைப்படுத்தல் ஏற்பாடுகளின் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியினால் முகாமைத்துவம்செய்யப்படுகின்ற இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தில் கவனஞ்செலுத்தி இலங்கையின் நிதியியல் துறையின் பாதுகாப்புவலையினை வலுப்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் அபிவிருத்திக் குறிக்கோளாகும். செயற்றிறன்வாய்ந்த வைப்புக் காப்புறுதித் திட்டங்களுக்கான பன்னாட்டு சிறந்த நடவடிக்கைகளுக்கமைவாக இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் நிதியியல் மற்றும் நிறுவனசார் இயலாற்றலை வலுப்படுத்துவதும் இச்செயற்றிட்டத்தின் இலக்காகக் காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி நிதியியல் துறை பாதுகாப்புவலை வலுப்படுத்தல் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராண்மையாக காணப்படும். இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமானது 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துடன், இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமாக சட்டரீதியாக நிறுவப்பட்டு பெயரிடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கிடையிலான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுகையில், முறையே திறைசேரியின் செயலாளர் திரு. கே.எம். மகிந்த சிறிவர்த்தன, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் நாட்டிற்கான பணிப்பாளர் திரு. பாரிஸ் ஹதாத் சேர்வூஸ், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க போன்றோர் உலக வங்கியினையும் இலங்கை மத்திய வங்கியினையும் பிரதிநிதித்துவப்படுத்தினர். தென்னாசியாவிற்கான உலக வங்கியின் பிராந்திய துணைத் தலைவர் திரு. மார்ட்டின் ரைசரும் கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்;றார்.
“இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் ஒதுக்குகள் முன்மொழியப்பட்ட கடனை வலுப்படுத்தும். இதன்மூலம் திட்டத்தின் மீண்டெழும் இயலாற்றலை உயர்த்துவதுடன் வைப்புக் காப்புறுதி தொடர்பில் பன்னாட்டுரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடவடிக்கைகளுடன் அதிகளவில் அணிசேர்வதற்கு இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினை வசதிப்படுத்தும். இவ்வழிமுறைகள் நிதியியல் முறைமையில் வைப்பாளர்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்கு உதவுவதுடன் நாட்டினுடைய நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு வழிவகுக்கும். எனவே இந்நிதியியல் வசதியின் வாயிலாக உதவி வழங்கும் உலக வங்கியானது உரியகாலத்திற்கான வழிமுறையொன்றாக கருதப்படுகின்றது” என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.
“நிலையானதும்; நம்பகமானதுமான நிதியியல் துறையானது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் நிலைபெறத்தக்க வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும். வைப்புக் காப்புறுதித் திட்டத்தினை வலுப்படுத்துவது கிராமப் புறங்களிலுள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்கலாக சிறிய வைப்பாளர்களின் சேமிப்புகளை பாதுகாக்கும். இலங்கையின் நிதியியல் முறைமையின் நம்பிக்கையினையும் இது பாதுகாக்கும். இது தொழில்வாய்ப்பை உருவாக்குவதற்கும் தொழில் வளர்ச்சிக்கும் அத்துடன் இலங்கை மக்களுக்காக மேம்படுத்தப்பட்ட நிதியியல் நலனோம்புகை ஆகியவற்றுக்கு பாதையமைக்கும்.” என்பது நிதியியல் துறை பாதுகாப்புவலை வலுப்படுத்தல் செயற்றிட்டத்தின் தொடர்புடன் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் நாட்டிற்கான பணிப்பாளர் திரு. பாரிஸ் ஹதாத் சேர்வூஸ் அவர்களின் கருத்துக்களாக காணப்பட்டன.