மேல், வட மேல், மத்திய மாகாணங்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தின
மேல் மாகாணம் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் அதன் பங்கினை 43.4 சதவீதமாக அதிகரித்து 2022 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் அதன் பிடியினைத் தொடர்ந்தும் வலுப்படுத்தியது. மேல் மாகாணத்தின் வலிமையான பிரசன்னம் அநேகமான பொருளாதார நடவடிக்கைகளில் விசேடமாக பணிகள் மற்றும் கைத்தொழில் துறைகளில் காணக்கூடியதாகவுள்ளது. அதன்பின்னர் வடமேல் (11.2 சதவீதம்) மற்றும் மத்திய (10.0 சதவீதம்) மாகாணங்கள் பொருளாதாரத்தில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்குகளைப் பதிவுசெய்துள்ளன.
மேல், வட மத்தி மற்றும் ஊவா மாகாணங்களிலிருந்து பெயரளவு மொ.உ.உற்பத்திகான பங்களிப்புகள் 2021 உடன் ஒப்பிடுகையில் 2022இல் அதிகரித்த அதேவேளை வடமத்திய மாகாணத்தின் பங்களிப்பு மாற்றமின்றிக் காணப்பட்டது. மேலும், அனைத்து மாகாணங்களினதும் பெயரளவு மொ.உ.உற்பத்தி ஆண்டுகாலப்பகுதியில் கணிசமாக வளர்ச்சியடைந்தமைக்கு விலைமட்டங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பிரதான காரணமாக அமைந்தது.