கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 நவெம்பரில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திலிருந்து 2023 நவெம்பரில் 3.4  சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பானது அநேகமாக 2023 நவெம்பரில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

உணவுப் பணச் சுருக்கமானது (ஆண்டிற்காண்டு), 2023 ஒத்தோபரின் 5.2 சதவீதத்திலிருந்து 2023 நவெம்பரில் 3.6 சதவீதத்தைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாகவும் தொடர்ந்திருந்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2023 ஒத்தோபரின் 4.9 சதவீதத்திலிருந்து 2023 நவெம்பரில் 6.8 சதவீதமாக அதிகரித்தது. கொ.நு.வி.சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 நவெம்பரில் 1.06 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. முறையே 0.12 சதவீதம் மற்றும் 0.95 சதவீதமாகவிருந்த உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் இதற்கு காரணமாக அமைந்தன. பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2023 ஒத்தோபரின் 1.2 சதவீதத்திலிருந்து 2023 நவெம்பரில் 0.8 சதவீதமாக குறைவடைந்தது.

பொருத்தமான கொள்கை வழிமுறைகள் அத்துடன் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு பணவீக்கம் நடுத்தர காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தை அண்மித்து நிலைநிறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும், எதிர்பார்க்கப்படும் வரி அதிகரிப்புக்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான இரண்டாம் சுற்றுத் தாக்கங்கள் என்பன நிருவாக ரீதியாக நிர்ணயிக்கப்படுகின்ற விலைகளுக்கு சாத்தியமான மேல்நோக்கிய சீராக்கங்களுடன் ஒன்றிணைவதன் மூலம் குறுகிய காலத்தில் பணவீக்கத்தில் நிலைமாறு அதிகரிப்பொன்று நிகழலாம்.

முழுவடிவம்

Published Date: 

Thursday, November 30, 2023