“பணவீக்கம் சனநாயகத்தை மரணிக்கச்செய்கின்றது: தொழிற்படுகின்ற சமூகங்களின் அடிப்படையாக அரசிறைசார் பொருத்தப்பாடு” என்ற கருப்பொருளின் கீழ் 2023 நவெம்பர் 21 அன்று பேர்லின் நகரில் இடம்பெற்ற பொருளாதார கலந்துரையாடல் தொடரில் அழைப்பின் பேரில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க கலந்துகொண்டார். இந்நிகழ்வு ஜேர்மன் பெடரல் நிதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2022இல் வரலாற்றிலேயே உயர்வுக்கு வேகமடைந்ததன் பின்னர் பணவீக்கத்தை அடக்குவதில் இலங்கையின் வெற்றிக் கதையினை ஆளுநர் வீரசிங்க எடுத்துரைத்தார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் மூலம் எடுக்கப்பட்ட வழிமுறைகளை அவர் தனது உரையில் ஆராய்ந்ததுடன் பணவீக்க வீழ்ச்சி உபாயம் மற்றும் செயன்முறை பற்றிய அனுபவத்தினையும் பகிர்ந்துகொண்டார்.
ஜேர்மன் பெடரல் நிதி அமைச்சர் திரு. கிறிஸ்டியன் லின்ட்னர், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் மற்றும் லண்டன் பொருளியல் பாடசாலைப் பேராசிரியர் அல்பேர்ச்ட் றிட்செல் ஆகியோர் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியவர்களில் இடம்பெற்றிருந்தனர்.