2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபை, இலங்கை மத்திய வங்கியின் அலுவல்களின் நிருவாகத்தினையும் முகாமைத்துவத்தினையும் மேற்பார்வை செய்வதற்கும் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும் பொறுப்பான சபையாக நிறுவப்பட்டிருக்கிறது. சட்டத்தின் நியதிகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் முன்னைய நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையின் உறுப்பினர்களாகத் தொடர்ந்துமிருப்பர்.
இதற்கமைய, நாணயச் சபையின் உறுப்பினர்களாக முறையே 2021.06.29 இலிருந்தும் 2022.07.27 இலிருந்தும் நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட திரு. சன்ஜீவ ஜயவர்த்தன சட்டத்தரணி மற்றும் திரு. ஏ. என். பொன்சேகா ஆகியோர் ஆளுகைச் சபையின் உறுப்பினர்களாகத் தொடர்ந்துமிருப்பர். எவ்வாறெனினும், 2020.07.29 இலிருந்து நாணயச் சபையின் உறுப்பினராக இருந்த முனைவர். ராணி ஜயமகா 2023.09.12 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அவரது இராஜினாமாக் கடிதத்தினைச் சமர்ப்பித்திருந்தமையினால் அவர் நாணயச் சபை உறுப்பினராக இல்லை. ஆளுகைச் சபையின் உறுப்பினராக தொடர்ந்துமிருந்து வந்த நியமன உறுப்பினரான திரு. சன்ஜீவ ஜயவர்த்தன சட்டத்தரணி 2023.11.05 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அவரது இராஜினாமாக் கடிதத்தினைச் சமர்ப்பித்திருந்தார். இதற்கமைய, பொருளாதார நெருக்கடியில் தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்குத் தொடர்பில், 2023.11.14 அன்று உச்ச நீதிமன்றம் அதன் இறுதித் தீர்ப்பை மேற்கொள்வதற்கு முன்னர் முனைவர் ஜெயமகா மற்றும் திரு. ஜயவர்த்தன ஆகிய இருவரும் தமது இராஜினாமாக்களைச் சமர்ப்பித்தனர்.