இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தை மையப்படுத்தி இலங்கையின் நிதியியல் துறை பாதுகாப்பு வலையின் நிதிசார் மற்றும் நிறுவனசார் இயலளவை வலுப்படுத்துவதற்கு இலங்கை நிதியியல் துறை பாதுகாப்பு வலை வலுப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் ஐ.அ.டொலர் 150 மில்லியனை வழங்க உலக வங்கி நிறைவேற்றுச் சபை அனுமதியளித்துள்ளது. உலக வங்கி, 2023 நவெம்பர் 09 அன்று பின்வரும் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
வொஷிங்டன், 2023 நவெம்பர் 09 – நிதியியல் துறை தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஐ.அ.டொலர் 150 மில்லியனை வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இன்று அனுமதியளித்தது.
“இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது நிதியியல் துறைக்கு ஆதரவளிப்பதற்கு வலிமையான பாதுகாப்பு வலைகளுக்கான தேவைப்பாட்டினை எடுத்துக்காட்டுகின்றது. பொருளாதாரம், வியாபாரங்கள், தனிநபர்;கள், சிறு வணிகங்கள் மற்றும் வறிய வீட்டலகுகள் என்பவற்றுக்கு உறுதியான மற்றும் நம்பகரமான வங்கித்தொழில் துறை அத்தியாவசியமானதாகும்” என உலக வங்கியின் மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான பணிப்பாளர் பரீஸ் ஹதாத்-செர்வோஸ் குறிப்பிட்டார். “வைப்புக் காப்புறுதித்திட்டத்தை வலிமைப்படுத்துவதென்பது பெண்கள் மற்றும் கிராமிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் உள்ளடங்கலான சிறியளவான வைப்பாளர்களின் சேமிப்புக்களை பாதுகாப்பதற்கு உதவும். நாட்டை மீண்டும் சிறந்ததாகக் கட்டியெழுப்பக்கூடிய இன்றியமையாத பாகமாக விளங்குகின்ற இலங்கையின் நிதியியல் முறைமையில் நம்பிக்கையினையும் இது நிலைநிறுத்தும்”. நிதியியல் துறை பாதுகாப்பு வலைக் கருத்திட்டமானது இலங்கை மத்திய வங்கியினால் முகாமைசெய்யப்படுகின்ற இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் நிதிசார் மற்றும் நிறுவனசார் இயலளவினை அதிகரிப்பதற்கு வடிவமைக்கப்பட்டதாகும். இந்நிதியிடலானது வங்கிகளினதும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினதும் காப்பீடுசெய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு ஈடளிப்புகளை செய்வதற்குப் பயன்படுத்தக்கூடிய இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் ஒதுக்குகளை அதிகரிப்பதற்கு துணையளிக்கும். இதற்கு நிகராக, செயல்திறன் வாய்ந்த வைப்புக்காப்புறுதித் திட்டங்களுக்கான சர்வதேச சிறந்த நடத்தைகளுக்கு இணங்க இலங்கை வைப்புக் காப்புறுதி திட்டத்தின் நிறுவனசார் வலுவூட்டலுக்கும் இக்கருத்திட்டம் ஆதரவளிக்கும்.
“பேரண்டப் படுகடன் நெருக்கடியொன்றின் போது நிதியியல் உறுதிப்பாட்டைப் பேணுவதற்கு நிதியியல் துறை பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவது மிகவும் முக்கியத்துவமிக்கதாகும்”, என முதன்மை நிதியியல் துறை விசேட நிபுணரும் கருத்திட்டத்திற்கான செயலணித் தலைவருமான அலெக்ஸ்ஸான்டர் பங்கோவ் குறிப்பிட்டார். “ஆற்றல்வாய்ந்த வைப்புக்காப்புறுதி முறைமையொன்று மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை மற்றும் தீர்மானக் கட்டமைப்புக்களுடன் இணைந்து நிதியியல் முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையினை பாதுகாப்பதுடன் மக்களின் சேமிப்புக்களையும் பாதுகாக்கும்”.
இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமானது 2010இல் நிறுவப்பட்டதுடன் அண்மைய ஆண்டுகளில் முறிவடைந்த உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கான பல ஈடளிப்புகளை மேற்கொண்டுள்ளது. தற்போது இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் வீட்டலகுகள் மற்றும் தொழில்முயற்சிகளின் வைப்புக்களுக்கு ரூ.1,100,000 வரை உத்தரவாதமளிக்கின்றது. இது இலங்கையின் 90 சதவீதத்திற்கு மேலான வைப்புக் கணக்குகளை உள்ளடக்குகின்றது. வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கான பாராளுமன்ற ஒப்புதலினூடாக இலங்கையில் வைப்புக் காப்புறுதிக்கான சட்டக் கட்டமைப்பு இவ்வாண்டின் ஆரம்பத்தில் தரமுயர்த்தப்பட்டது. நிதியியல் துறை உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் அதன் சட்டரீதியான பொறுப்பாணையை செயல்திறன்வாய்ந்த விதத்தில் நிறைவேற்ற இயலுமானதாகவிருப்பதற்கு இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் தற்போது நிறுவன ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் வலுப்படுத்தப்படவேண்டும்.