கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 செத்தெம்பரின் 1.3 சதவீதத்திலிருந்து 2023 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இச்சிறிய அதிகரிப்பானது, அனேகமாக இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஒத்தோபரில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது.
உணவு பணச் சுருக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் தொடர்ந்து சென்று முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஒத்தோபரில் 5.2 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2023 ஒத்தோபர் 4.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 ஒத்தோபரில் -0.22 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்கு, உணவு வகைகளில் உள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட -0.63 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளினதும் உணவல்லா வகைகளில் உள்ள பொருட்களில்;; பதிவாகிய 0.41 சதவீத விலை அதிகரிப்புக்களினதும் ஒன்றிணைந்த தாக்கமாகவிருந்தது. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2023 செத்தெம்பரின் 1.9 சதவீதத்திலிருந்து 2023 ஒத்தோபரில் 1.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் மூலம் துணையளிக்கப்பட்டு பணவீக்கமானது நடுத்தர காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தை அண்மித்து நிலைநிறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் அரசாங்கம் மூலம் நிருவாக ரீதியாக நிர்ணயிக்கப்படுகின்ற விலைகள், அறவீடுகள், வரிகள் போன்றவற்றிற்கு எவையேனும் மேல்நோக்கிய அதிகரிப்புக்கள் இருக்குமாயின், குறுகிய காலத்தில் பணவீக்கத்தில் இலக்கைத் தாண்டிய மாறுதல் அதிகரிப்பு நிகழும் சாத்தியம் காணப்படுகின்றது.