இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) - 2023 ​செத்தெம்பா்

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 செத்தெம்பரில் 44.3 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான சுருக்கத்தினை எடுத்துக்காட்டியது. கருத்திட்டப் பணிகளில் தொடர்ச்சியான வீழ்ச்சிக்கு மேலதிகமாக,  மாத காலப்பகுதியில் நிலவிய தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறுகின்ற கட்டடவாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினைப் பாதிப்படையச் செய்தது.

செத்தெம்பரில் புதிய கட்டளைகள் மெதுவான வேகத்திலேனும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தன. விலைக்கோரல்களைக் கோரும் வாய்ப்புக்கள், விசேடமாக சில வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களுக்காக படிப்படியாகத் திறக்கப்பட்ட போதிலும், விலைக்குறிப்பீட்டு விலைகள் மிகவும் போட்டிமிக்கவையாகக் காணப்பட்டன என்று பல பதிலிறுப்பாளர்கள் தெரிவித்தனர். அதேவேளை, அனேகமான கம்பனிகள் அத்தியாவசியமான பணியாளர்களைக் கொண்டு இயங்குவதற்கு விரும்புகின்றமையினால் தொழில்நிலை சுருக்கமடைந்தே காணப்பட்டது. மேலும், கட்டடவாக்கப் பணியில் குறைவுக்கு இசைவாக மாத காலப்பகுதியில் கொள்வனவுகளின் அளவும் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, பிரதானமாக கேள்வியில் குறைவு காரணமாக நிரம்பலர் விநியோக நேரம் மாத காலப்பகுதியில் குறுக்கமடைந்து காணப்பட்டது.

முன்னெடுக்கப்படும் விலைக்கோரல் செயன்முறைகள், சில இடைநிறுத்தப்பட்ட அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களை மீளத் தொடங்குவதில்  சாதகமான அபிவிருத்திகள் என்பவற்றின் பிரதான காரணமாக அடுத்துவருகின்ற மூன்று மாதங்களுக்கான எதிர்பார்க்கைகள், சாதகமாகக் காணப்பட்டன. எவ்வாறாயினும், சக்தித் தொடர்புபட்ட செலவுகளின் மேல்நோக்கிய போக்கு, சாதகமற்ற வானிலை நிலைமைகள் என்பன பற்றி கம்பனிகள் கவலையடைந்துள்ளன.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, October 31, 2023