நிதியியல் வசதிக்குட்படுத்தல் முயற்சிகளை நோக்கிய அதன் உபாய நோக்கிற்கு முக்கியத்துவமளித்து பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரத்தியேகமான வெப்தளப் பக்கத்தை இலங்கை மத்திய வங்கி 2023.08.04 அன்று தொடங்கிவைத்தது.
2018ஆம் ஆண்டு தொடக்கம் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பதில் இலங்கை மத்திய வங்கியுடன் நீண்டகாலம் நிலைத்திருக்கின்ற பங்குடமையாளரான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் உதவியுடன் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் வெப்தளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பிந்திய இம்முன்முயற்சியானது இலங்கைக்கான ஒட்டுமொத்த தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் ஒரு பாகமாக விளங்குகின்றது - நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் தொழில்களுக்கும் அதிகம் கிடைக்கத்தக்க, வினைத்திறன்மிக்க மற்றும் வசதியான நிதியியல் பணிகளை கிடைக்கச்செய்யும் முயற்சியில் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் முக்கிய பங்காற்றியுள்ளது.
மத்திய வங்கியானது இன்று அதன் புதிய சட்டவாக்கத்தின் கீழ் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிக்கின்ற பொறுப்பினைக் கொண்டுள்ளது. எனவே, வெப்தளப் பக்கத்தை தொடங்கிவைத்தலானது நாட்டில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பதை நோக்கிய முக்கிய படியொன்றினைக் குறிப்பதுடன் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வசதிக்குட்படுத்தல் முயற்சிகள் மீதான தகவல்களை பரப்புவதனூடாக நாட்டின் அனைத்து ஆர்வலர்களுக்கும் வசதியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் வெப்தளப் பக்கம், பயனர் சிநேகமிக்க இடைமுகமொன்றுடன்கூடிய அத்துடன் அறிந்த மற்றும் தர்க்கரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பயனர்களுக்கு ஆதரவளிக்கின்ற நிதியியல் அறிவு, மனோபாவம் மற்றும் நடத்தை என்பவற்றை மேம்படுத்துவதற்கு வெளியீடுகள், பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவித்தல், வினாடிவினாக்கள் மற்றும் விளையாட்டுக்கள் போன்ற நிதியியல் அறிவுசார்ந்த விடயங்களையும் கருவிகளையும் கொண்டமைந்து அதன் பயனர்களுக்கு தேடும் அனுபவத்தை வழங்குகின்றது.
தமது நிதியியல் அறிவு முயற்சிகளுக்கு தகவல்களை நாடுவதற்கும் கூட்டுமுயற்சிக்கும் அனைத்து ஆர்வலர்களுக்குமான பகிரப்பட்ட தளமொன்றாக இப்பக்கம் செயற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வரவிருக்கும் இலங்கைக்கான நிதியியல் அறிவு வழிகாட்டலுக்கு நிறைவளிப்பதாக இது விளங்கும்.
வெப்தளப் பக்கத்தினுள் பிரவேசிப்பதற்கு https://www.rdd.cbsl.lk/
[இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை: உதவி ஆளுநர் திரு. ஜே பி ஆர் கருணாரத்ன் மூத்த துணை ஆளுநர் திருமதி. டீ எம் ஜே வை பி பர்ணாந்து; ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்க் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான முகாமையாளர் திரு. ஆலஜன்ரோ அல்வரெஸ் டி லா கெம்பர் துணை ஆளுநர் திருமதி. கே எம் ஏ என் டவுலுகல் திருமதி. ஆர் அரந்தர் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் மற்றும் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எம் எஸ் கே தர்மவர்தன]