கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 பெப்புருவரியின் 50.6 சதவீதத்திலிருந்து 2023 மாச்சில் 50.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, 2023இல் பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வேகக்குறைவுப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.
உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 பெப்புருவரியின் 54.4 சதவீதத்திலிருந்து 2023 மாச்சில் 47.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 பெப்புருவரியின் 48.8 சதவீதத்திலிருந்து 2023 மாச்சில் 51.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 மாச்சில் 2.92 சதவீதமாகப் பதிவுசெய்யப்பட்டதுடன் இதற்கு, 3.71 சதவீதமாகவிருந்த உணவல்லா வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. எவ்வாறாயினும், உணவு வகை 0.79 சதவீதம் கொண்ட மாதாந்த வீழ்ச்சியினைப் பதிவுசெய்தது. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2023 பெப்புருவரியின் 43.6 சதவீதத்திலிருந்து 2023 மாச்சில் 39.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
முன்னோக்கி நோக்குகையில், கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் பணவீக்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கானது 2023 முழுவதும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கத்துடன் ஒன்றிணைந்து, இறுக்கமான நாணய மற்றும் இறைக்கொள்கை வழிமுறைகள், அண்மைய செலாவணி வீத உயர்வடைதல் மற்றும் குறைவான உலகளாவிய பண்ட விலைகளின் பாரிய ஊடுகடத்தல் என்பவற்றிற்கு மத்தியில் உணவு மற்றும் சக்தி விலைகளின் மெதுவடைதல், அண்மைய எரிபொருள் விலைத்திருத்தங்களின் இரண்டாம் சுற்றுத்தாக்கங்கள் மற்றும் உள்நாட்டு வழங்கள் நிலைமைகளில் எதிர்பார்க்கப்பட்ட மேம்பாடுகள் என்பன காரணமாக குறைவடைந்த கேள்வி நிலைமைகளினால் இப்பணவீக்க வேகக்குறைப்புச் செயன்முறை துணையளிக்கப்பட்டிருந்தது.