இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 சனவரி 24ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப்பொருளாதார பக்கங்களின் மீதான அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் எறிவுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதனை நிச்சயப்படுத்துவதற்கு தற்போதுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை நிலையினைப் பேணுவதானது அவசியமானதென சபை அபிப்பிராயப்பட்டது. இறுக்கமான இறைக் கொள்கையுடன் இணைந்து இத்தகைய இறுக்கமான நாணய நிலைமைகள் பணவீக்க எதிர்பார்க்கைகளை கீழ்நோக்கி சீராக்கம் செய்து, பணவீக்க வீதங்களை 2023 இறுதியளவில் விரும்பத்தக்க மட்டங்களிற்கு மத்திய வங்கி கொண்டுவருவதனை இயலச்செய்வதுடன் அதன்மூலம் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டினை நடுத்தர காலத்தில் மீட்டெடுக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Wednesday, January 25, 2023