கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசுஇ 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 நவெம்பரின் 61.0 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பர் 57.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து, 2022இன் இரண்டாம் அரைப்பகுதியில் குறைந்தளவான வாசிப்பைப் பதிவுசெய்தது. அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 நவெம்பரின் 73.7 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 64.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 நவெம்பரின் 54.5 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 53.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 திசெம்பரில் 0.26 சதவீதமாகப் பதிவுசெய்யப்பட்டது. 0.36 சதவீதமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்புக்கள் இதற்கு பிரதானமாகப் பங்களித்தன. இதற்கமைய, மாதகாலப்பகுதியில், உணவல்லா வகையினுள், ஆடைகள் மற்றும் காலணி (ஆடைகள்), போக்குவரத்து (விமானக் கட்டணம் மற்றும் வாகன வருமான உத்தரவாத பத்திரக் கட்டணம்) மற்றும் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப் பெற்றோலிய வாயு) துணை வகைகளின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. எனினும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஒட்டுமொத்த மாதாந்த அதிகரிப்பை ஓரளவிற்கு மிதமடையச்செய்து, பிரதானமாக உடன் மீன், கருவாடு, பெரிய வெங்காயம் மற்றும் பாண் ஆகியவற்றில் அவதானிக்கப்பட்ட விலைக் குறைப்புக்கள் காரணமாக, உணவு வகையிலிருந்த பங்களிப்பு 2022 திசெம்பரில் -0.10 சதவீதத்தைப் பதிவுசெய்தது.