புதிய துணை ஆளுநர் நியமனம்

கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் நாணயச் சபையானது உதவி ஆளுநரும் நாணயச்  சபைக்கான செயலாளருமான திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல அவர்களை 2022 ஒத்தோபர் 07ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவியுயர்த்தியுள்ளது.

திருமதி டவுளுகல, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, நிதி, பன்னாட்டுத் தொழிற்பாடுகள், இடர்நேர்வு முகாமைத்துவம், பிரதேச அபிவிருத்தி, மனிதவள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி அத்துடன் அபிவிருத்தி ஆகிய துறைகளில் வேறுபட்ட பதவிகளில் இலங்கை மத்திய வங்கியில் 31 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார்.

இவர் முதன்மைக் கணக்காளராகவும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளதுடன் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையில் சட்ட கட்டமைப்பையும் ஆளுகையினையும் வலுப்படுத்துவதற்கு பங்களித்துள்ளார். திருமதி. டவுளுகல துணை ஆளுநராக நியமிக்கப்பட முன்னர் உதவி ஆளுநராக பதவி வகித்ததுடன் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம், வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையம் என்பவற்றுக்கு பொறுப்பாகவிருந்தார் அத்துடன் நாணயச் சபைக்கான செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர், சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழு, நாணயச் சபை ஆலோசனை கணக்காய்வுக் குழு மற்றும் ஒழுக்கநெறிக் குழு ஆகியவற்றுக்கான செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், நிதி திட்டமிடல் அமைச்சுக்கு இவர் விடுவிக்கப்பட்டு அரசாங்கத் தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார். அமைச்சில் பதவிவகித்த போது இவர் திறைசேரியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை வங்கியின் பதவிவழிப் பணிப்பாளராகவும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் உறுப்பினரொருவராகவும் பணியாற்றினார்.

தற்போது திருமதி டவுளுகல இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.

திருமதி டவுளுகல, ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து நிதியியல் மற்றும் வியாபாரப் பொருளியலில் முதுமானி விஞ்ஞானப் பட்டத்தினையும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழத்திலிருந்து வியாபார நிர்வாக முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவக் கணக்காளர்களின் பட்டய நிறுவகத்தின் சக உறுப்பினர் ஆவார்.

Published Date: 

Tuesday, October 11, 2022