வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 ஓகத்து

இறக்குமதிச் செலவினமானது 2022 யூலையுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றை பதிவுசெய்த போதிலும் ஆண்டிற்காண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக 2022 ஓகத்தில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு முன்னுரிமையளிக்கும் தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு 2022 ஓகத்தில் அரசாங்கம் அவசரமற்ற இறக்குமதிகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை இறுக்கமாக்கிய போதிலும் பின்னர் 2022 செத்தெம்பர் மாத காலப்பகுதியில் பகுதியளவில் தளர்த்தப்பட்டன. அதேவேளை, ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 ஓகத்தில் அதிகரித்து 2022 ஏப்பிறல் தொடக்கம் அவதானிக்கப்பட்ட அதன் வரவேற்கத்தக்க வளர்ச்சிப் போக்கினைத் தொடர்ந்தன. இதன் விளைவாக, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 யூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஓகத்தில் அதிகரித்துக் காணப்பட்டன. சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2021இன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2022 ஓகத்தில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. 2022 ஓகத்து மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன. மத்திய வங்கி அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியிடும் பொருட்டு வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையைத் தொடர்ந்தும் வழங்கியமையினால் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் பயன்படுத்தக்கூடிய மட்டம் குறைவடைந்துள்ளது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 361 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, October 6, 2022