இலங்கை மத்திய வங்கியானது அரச பிணையங்களின் வழங்கல் தொடர்பில் திருத்தப்பட்ட 1937ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவு தொடர்பில் பின்பற்றப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் பின்வரும் தனது விளக்கத்தினை வழங்க விரும்புகின்றது.
1. பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டமானது பதிவு செய்யப்பட்ட பங்குகள், அரச வாக்குறுதிச் சான்றிதழ்கள், கொண்டுவருபவர் முறிகள் மற்றும் திறைசேரி முறிகள் போன்றவற்றினை வழங்கும் நோக்கத்திற்காக இயற்றப்பட்டது.
2. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரி முறிகளை ஏல அடிப்படையில் வழங்குதலானது 1997இல் ஆரம்பிக்கப்பட்டது. திறைசேரி முறிகளினை முதனிலை வணிகர்க;டான பகிரங்க ஏலங்களில் வழங்கத் தொடங்கியமையுடன் திறைசேரி முறிகளின் விலை மற்றும் அளவு போன்றவை சந்தை விசைகளின் மூலம் தீர்மானிக்கப்பட்டன. எனவே, தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் திறைசேரி முறி வழங்கலுக்கு பின்னர் வெளியிடப்பட்டிருந்தாலும் அதன் திகதி மற்றும் வர்த்தமானி இலக்கங்கள் முன்னரே ஒதுக்கப்பட்டிருந்தன. இலங்கை மத்திய வங்கியானது சட்டத்துடன் இணங்கிச் செல்லும் நோக்கத்திற்கிணங்க பின்வரும் வழிமுறைகளை எடுத்துள்ளது.
அ) குறிப்பிட்டதொரு ஆண்டுப்பகுதிக்கான மொத்தக் கடன்பாடுகள் ஒவ்வொரு நிதியியல் ஆண்டுக்குமான ஒதுக்கீட்டுச் சட்டங்களின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தினால் ஒப்புதலளிக்கப்பட்ட வரையறைக்குள் பேணப்படுகின்றது.
ஆ) நிதி அமைச்சினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி முறிகளின் வழங்கலினுடாக திரட்டப்பட வேண்டிய தொகை, நறுக்கு வீதம், ஏலத்திகதி, தீர்ப்பனவு திகதி மற்றும் முதிர்ச்சிகள் போன்றவை உள்ளடங்கலாக அனைத்து தகவல்களையும் மூன்று மொழிகளிலும் தேசிய செய்திதாள்; மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளம் போன்றவற்றில் வெளியிடுகின்றது.
இ) பொதுமக்களின் தகவல்களுக்காக ஒவ்வொரு ஏலமும் முடிவடைந்ததும் ஏலங்களின் முடிவுகள் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளமூடாக தகவல் பரப்பப்படுகின்றது.
3. திறைசேரி முறிகளின் புதிய தொடர்களினை வழங்குதலுக்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியானது ஏற்கனவே கடந்த காலங்களில் வழங்கப்பட்ட திறைசேரி முறிகளின் எஞ்சிய தொடர்களினை மீளத்திறப்பதுடன், சிறந்த பன்னாட்டு படுகடன் முகாமைத்துவ நடைமுறைகளுடன் இணங்கிச்செல்லும் விதத்தில் எஞ்சியுள்ள முதிர்ச்சியின் அடிப்படையில் அவற்றினை வழங்கும். எனவே, குறிப்பிட்ட ஏதேனும் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலானது புதிதாக வழங்கப்பட்ட அல்லது கவனத்திற்குரிய நிதியியல் ஆண்டுக் காலப்பகுதியில் மீளத்திறக்கப்பட்ட திறைசேரி முறைகளின் விபரங்களை உள்ளடக்கியிருக்கும்.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தில் கூறப்பட்ட ஏற்பாடுகளுடன் இணங்கிச்செல்லும் விதத்திலுள்ளது என்ற நோக்கினை இலங்கை மத்திய வங்கியானது மீண்டும் வலியுறுத்துகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட திறைசேரி முறிகள் முழுமையான சட்ட அதிகாரத்தினையும் பயனுறுதன்மையினையும் கொண்டுள்ளதென்று இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு உறுதியளிக்கின்றது.
மேலும், இலங்கை மத்திய வங்கியானது பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தில் செய்ய வேண்டிய பொருத்தமான திருத்தங்களுக்காக அரசாங்கத்திற்கு விதந்துரைப்புக்களை மேற்கொள்ளும்.