இலங்கை மத்திய வங்கி, அதன் தூய நாணத் தாள் கொள்கையினை நடைமுறைக்கிடுவது தொடர்பில் அதனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றமை பற்றி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. தூயநாணயத் தாள் கொள்கையானது, நாணயத் தாள்களின் தர நியமங்களைப் பேணுவதனையும் அதன் மூலம் உண்மையான தாள்களுக்கும் போலித் தாள்களுக்குமிடையிலான வேறுபாட்டினைக் கண்டறிய உதவுவதனையும் நோக்கமாகக் கொண்டதாகும். இக்கொள்கையினூடாக நாட்டின் நன்மதிப்பினை உயர்த்துவதற்கும் வினைத்திறனை மேம்படுத்தி நாணயத் தாள் செயன்முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்படும் செலவுகளைச் சிக்கனப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாணயத் தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், மாற்றங்களைச் செய்தல் அல்லது உருச்சிதைத்தல் நாணய விதிச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதொரு குற்றமாகும். மேலும், இலங்கை மத்திய வங்கி அத்தகைய வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களுக்குப் பதிலிடுவதற்காக அதன் நாணயத் தாள்களின் அச்சிடலை அதிகரிக்க வேண்டியேற்படுகிறது. இதன் பொருட்டு பொதுமக்களின் நிதியினைப் பெருமளவிற்குச் செலவிட வேண்டியேற்படுகிறது. இல்லையெனில் அப்பணத்தினை மிக அர்த்தம் நிறைந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலங்கை மத்திய வங்கி நாணயத் தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்துகின்ற, மாற்றம் செய்கின்ற அல்லது உருச்சிதைக்கப்படுகின்றமை தொடர்பிலான கோரிக்கையினை ஊக்குவிப்பதற்கான கடப்பாடு எதனையும் கொண்டிருக்கவில்லை.
இதன்படி, 2017 திசெம்பர் 31 இற்குப் பின்னர் அத்தகைய வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களுக்குப் பதிலாக புதிய நாணயத் தாள்கள் வழங்கப்படமாட்டாது என்பது தொடர்பிலான விளம்பரங்கள் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காகவே பிரசுரிக்கப்பட்டன.
எவ்வாறெனினும், வேண்டுமென்றே சேதப்படுத்தப்படாத, மாற்றம் செய்யப்படாத அல்லது உருச்சிதைக்கப்படாத ஆனால் சுற்றோட்டத்தின் போது வழமையான பாவனையின் காரணமாக பழுதடைந்து போன நாணயத் தாள்களை தற்போதைய நடைமுறையிலுள்ளவாறு இலங்கை மத்திய வங்கியிலும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.
தூய நாணயத் தாள் கொள்கையினைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டின் சட்ட ரீதியான நாணயத்தின் பெறுமானத்தினையும் மேன்மையினையும் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவுமாறு பொதுமக்களைக் கோருவதற்கு இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது.