கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

 கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஓகத்தின் 6.0 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2020 செத்தெம்பரில் நிலவிய உயர் தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து,  உணவுப் பணவீக்கம்,  (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 11.5 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 3.5 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஓகத்தின் 4.3 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக 2021 செத்தெம்பரில் 0.47 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் முறையே 0.09 சதவீதத்தினையும் 0.38 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் பருப்பு, பாண் மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகள் அதிகரித்த அதேவேளை, அரிசி மற்றும் காய்கறிகள் விலைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன. அதேவேளை, நலம் (தனியார் மருத்துவத் தொழில் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான கட்டணங்கள்) மற்றும் கல்வி (சர்வதேச பாடசாலைக் கட்டணங்கள்: ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை) துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களின் பிரதான காரணமாக மாத காலப்பகுதியில் உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 ஓகத்தின் 3.2 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 3.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, September 30, 2021