தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 நவெம்பரின் 4.1 சதவீதத்திலிருந்து 2016 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 திசெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 திசெம்பரில் மாற்றமின்றி கடந்த மாதத்தின் 4.0 சதவீதத்தில் காணப்பட்டது.
மாதாந்த மாற்றத்தினைப் பரிசீலனையில் கொள்ளும் பொழுது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 நவெம்பரில் 116.6 இலிருந்து 2016 திசெம்பரில் 118.0 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகைகளின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். உணவு வகையில் அரிசி, தேங்காய், உடன்மீன், காய்கறிகள், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பப்பாளி மற்றும் முட்டைகளின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன. உணவல்லா வகையின் விலைகள் ஆடை மற்றும் காலணி; தளபாடம், வீட்டலகுகளின் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டலகுகளின் பேணல்; போக்குவரத்து; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளில் அதிகரித்தன. வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம், ஏனைய வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை என்பனவற்றின் விலைகள் 2016 திசெம்பர் மாத காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, நலம்; தொடர்பூட்டல்; மற்றும் கல்வி துணை வகைகளின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 நவெம்பரின் 6.8 சதவீதத்திலிருந்து 2016 திசமெ;பரில் 6.7 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 நவெம்பரின் 5.8 சதவீதத்திலிருந்து 2016 திசெம்பரில் 5.9 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.