நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணியினை ஈர்ப்பதற்கும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்குநிலை மீதும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மீதும் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கும் சிறப்பு வைப்புக் கணக்குகளின் உள்ளார்ந்த ஆற்றலினைக் கருத்திற்கொண்டு, கௌரவ நிதி அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடன் அத்தகைய வைப்புக்கள் வைப்பிலிடப்பட்ட ஆரம்பத் திகதியிலிருந்து 24 மாதங்களைக் கொண்ட திரண்ட காலப்பகுதியொன்றுக்கு சிறப்பு வைப்புக் கணக்குகளை நீடிப்பதற்கு அனுமதி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். அவ்வாறு நீடிக்கப்படுகின்ற சிறப்பு வைப்புக் கணக்குகள், அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆண்டிற்கு 02% வரையிலான மேலதிக வட்டிக்கு தகைமையுடையனவாகவிருக்கும்.
நாட்டில் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்ளும் தேசிய முயற்சிக்கான உதவியினை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் 2020 ஏப்பிறல் 08 அன்று சிறப்பு வைப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2021 யூன் 25ஆம் திகதியன்று உள்ளவாறு சிறப்பு வைப்புக் கணக்குகளுக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வைப்புகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 451 மில்லியன் தொகையினைக் கொண்டிருந்தது.
மேற்குறிப்பிட்டவை தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 2021 யூன் 30ஆம் திகதியிடப்பட்ட 2234/19ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை (அதிவிசேட) அறிவித்தல்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், மேற்குறித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி) அவசியமான பணிப்புரைகளை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது.
சிறப்பு வைப்புக் கணக்குகள் பற்றிய மேலதிகத் தகவல்களை www.dfe.lk என்ற இணையத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.








