பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன்
முன்னாள் ஆளுநர் (2019-2021)
தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் பதினைந்தாவது ஆளுநர் ஆவார், 2019 திசெம்பர் மாதம் கடமைகளைப் பொறுப்பேற்று 2021 செத்தெம்பர் மாதம் பதவி விலகினார்.
பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவரது இரண்டாந்தரக் கல்வியை காலியிலுள்ள வித்தியாலோக கல்லூரியிலும் பல்கலைக்கழகக் கல்வியை (1960-64) பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். அவர் தனது இளமானிப் பட்டத்தினை பொருளாதாரத்தில் இரண்டாம் வகுப்பு உயர் பிரிவில் பெற்றிருந்தார். அவர் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை ஓக்ஸ்வோட் பல்கலைக்கழக்கத்தில் மேற்கொண்டதுடன், 1973இல் மெய்யியல் துறையில் முனைவர் பட்டத்தினை தனதாக்கிக்கொண்டார். தற்பொழுது அவர் கொழும்புப் பல்கலைக்கழக்கத்தின் பெருமைக்குரிய ஓய்வுபெற்ற பேராசிரியராவார்.
பேராசிரியர் லக்ஷ்மன் அவர் கல்விகற்ற பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே அவரது கற்பித்தல் பணியினை ஆரம்பித்ததுடன் பொருளாதாரத் திணைக்களத்தின் நிறுவனர் என்ற தலைமைத்துவப் பதவியினை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக 1981இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார். 2017இல் மூத்த பேராசிரியராக அவர் ஓய்வு பெறும் வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இப்பதவினை வகித்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் லக்ஷ்மன் பொருளாதாரத் திணைக்களத்தின் தலைவர்; பீடாதிபதி, பட்டாதாரிக் கற்கைகளுகான பீடம் (1992-94) மற்றும் துணை வேந்தர் (1994-99) போன்ற பல்வேறு பதவிகளை வகித்திருக்கின்றார்.
பெருமைக்குரிய ஓய்வுபெற்ற பேராசிரியர் என்ற முறையில் கொழும்பு பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தினை வழங்கி அவரைக் கௌரவித்தது. 2005இல் தேசிய கௌரவத்திற்குரிய தேசமான்ய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பேராசிரியர் லக்ஷ்மன் புகழ்பூத்த ஓர் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர், அரசியல் பொருளாதாரம், தென்னாசியாவின் பொருளாதார அபிவிருத்தி, தென்னாசியாவில் யப்பானிய முதலீடுகள், இலங்கையில் அமைப்பியல் சீராக்க கொள்கைகளின் சமூகப் பொருளாதாரத் தாக்கம் போன்றவை உள்ளிட்ட பல்வேறு பரந்த விடயங்களில் எண்ணற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு ஆசிரியராவார். பேராசிரியர் லக்ஷ்மன் சிங்கள மொழியில் எழுதிய பொருளாதாரப் பாடப்புத்தகமொன்று இலங்கை மாணவர்களினால் தலைமுறை தலைமுறையாக பரந்தளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இரண்டு நூல்கள் அவரினால் தொகுக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது நூல் 1997இல் இலங்கைப் பொருளியலாளர் சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்ட அபிவிருத்தியின் இக்கட்டான நிலை: இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலப் பொருளாதார மாற்றங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. மற்றைய நூல் 2000ஆம் ஆண்டில் நோவா சயன்ஸ் வெளியீட்டாளர்களினால் (நியுயோர்க்) பிரசுரிக்கப்பட்ட சுதந்திரத்திற்குப் பின்னராக இலங்கையின் அபிவிருத்தி: சமூகப் பொருளாதார நோக்குகள் மற்றும் ஆய்வுகள் என்ற மகுடத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இவை பரந்தளவிற்கு உசாத்துணை நூல்களாக பயன்பட்டு வருகின்றன.
அவரது கல்வியியல் பணியின் போதான பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் பேராசிரியர் லக்ஷ்மன் வருகைதரு பேராசிரியராக நெதர்லாந்து, யப்பான், யூலோசிலாவியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலுள்ள அநேக வெளிநாட்டு கல்வியியல் நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.
பேராசிரியர் லக்ஷ்மன் நிதி மற்றும் வங்கித்தொழில் மீதான சனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், (1990), நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சிற்கான மூத்த பொருளியல் ஆலோசகராகவும் (2008-09), வரி விதிப்பு மீதான சனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராகவும் (2009-10), கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவராகவும் (2010-15), சனச பல்கலைக்கழக நிறுவகத்தின், கேகாலை, துணை வேந்தராகவும், (2014-19) அத்துடன் 2018இல் இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பரிசீலிப்பதற்காக சனாதிபதியினால் நியமிக்கபட்ட நிபுணர் குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.