முக்கிய தொழிற்பாடுகள்

ஒழுங்குவிதிகள் மற்றும் மேற்பார்வை

இலங்கை மத்திய வங்கி முக்கிய நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வை செய்து ஒழுங்கு முறைப்படுத்தி வருகின்றது. ஒழுங்குவிதிகளூடாக மத்திய வங்கி நிதியியல் நிறுவனங்கள் பூர்த்திசெய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் நியமங்களை அல்லது கொள்கைகளை ஏற்படுத்துகிறது. மேற்பார்வையில் மத்திய வங்கி, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு இடர்நேர்வினை ஏற்படுத்தும் நிதியியல் நிறுவனங்களை மேற்பார்வை செய்வதுடன், தேவையானவிடத்து, அவற்றைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

முக்கிய ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன.

(i)   இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட சொத்துக்களின் மொத்த பெறுமதிக்கு மூலதனத்தின் குறைந்தபட்ச விகிதம்.
(ii)  பொறுப்புக்களுக்கான திரவச் சொத்துக்களின் குறைந்தபட்ச விகிதம்
(iii) தனியொரு கடன்பாட்டாளருக்கான கடன் வழங்கல் அளவின் மீதான வரையறை
(iv) அறவிட முடியா மற்றும் ஐயப்பாட்டுக்கடன்களுக்கான ஏற்பாடு
(v)  குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் வருடாந்த கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்களை சமர்ப்பித்தல்.

ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள், வங்கித்தொழிலில் அல்லது நிதியியல் வியாபாரத்தில் இயல்பாகவே இணைந்து காணப்படும் சில இடர்நேர்வுகளை தணிப்பதற்கு நிறுவனங்களுக்கு உதவும் முன்மதியுடைய நியமங்களாகப் பணியாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. அத்தகைய ஒழுங்குவிதிகள், தொடர்பான சட்டங்களின் ஏற்பாட்டு நியதிகளில் நிர்ணயிக்கப்படுகின்றன. மேற்பார்வையானது பின்வருவனவற்றுடன் தொடர்புபட்டதாகும்; தலத்திற்கு வெளியேயான கண்காணிப்புக்களினூடாக நிதியியல் நிறுவனங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் தலத்திலான பரீட்சிப்புக்கள் தலத்திற்கு வெளியேயான கண்காணிப்பு என்பது, நேரகாலத்துடனான மீட்பு நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலம் தீர்வுகாணக்கூடிய நேரிடக்கூடிய பிரச்சனைகளின் நேரகாலத்துடனான எச்சரிக்கைகளை அடையாளம் காணும் பொருட்டு அவற்றின் செயலாற்றம் மற்றும் நிதியியல் அந்தஸ்து தொடர்பாக நிறுவனங்களிலிருந்து காலத்திற்கு காலம் (மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு போன்றவை) பெறப்படும் தகவல்களைப் பரீட்சித்துக் கொள்வதாகும்.

தலத்திலான பரீட்சிப்புக்களின் கீழ் மத்திய வங்கி அலுவலர்கள், நிறுவனங்களின் தொழிற்பாடுகளை பின்வரும் விதத்தில் மேற்பார்வை செய்வதன் பொருட்டு அவற்றின் ஏடுகளையும் கணக்குகளையும் பரீட்சிப்பதற்காக காலத்திற்குக் காலம் நிறுவனங்களுக்கு விஜயம் செய்கின்றனர். முன்மதியுடைய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுடன் இணங்கிச் செல்வதை சரிபார்த்தல். பல்வேறு இடர்நேர்வுகளையும், அதாவது கொடுகடன் இடர்நேர்வு, திரவத்தன்மை இடர்நேர்வு, சந்தை இடர்நேர்வு மற்றும் தொழிற்பாட்டு இடர்நேர்வு மற்றும் நிறுவனங்களின் இடர்நேர்வு முகாமைத்துவ இயலாற்றல் என்பனவற்றை மதிப்பீடு செய்தல். இப் பரீட்சிப்புக்களின் முடிவுகளின் அடிப்படையில் மத்திய வங்கி நிறுவனங்களின் முகாமைத்துவத்துடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு அவதானிக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பலயீனங்களை நிவர்த்தி செய்வதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேவைப்படுத்துகின்றது.

பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு 

நிதியியல் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய முறையியல் சார்ந்த இடர்நேர்வு கட்டியெழுப்பப்படுவதனை குறைப்பதற்காக ஒட்டுமொத்த நிதியியல் முறைமையின் தாக்குப்பிடிக்க்கூடிய தன்மையினை அதிகரிப்பதனை பேரண்ட முன்மதியுடைய கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. பேரண்ட முன்மதியுடைய கொள்கையானது இடர்நேர்வுகளைத் தடுத்தல் அல்லது தணித்தலின் பொருட்டு, நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினை பாதிக்கும் இடர்நேர்வுகளை அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடல் என்பனவற்றின் மூலம் ஏற்படுத்தப்படுவதுடன் ஒட்டுமொத்த நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு பேணப்படுவதனையும் உறுதிப்படுத்துகிறது. இந்நோக்கத்திற்காக மத்திய வங்கியானது நிதியியல் மற்றும் நாணய முறைமையினையும் முறையியல் சார்ந்த இடர்நேர்வுகளை (ஒட்டு மொத்த சந்தையை பாதிக்கின்ற இடர்நேர்வுகள்) கட்டுப்படுத்துவதற்கான குறிப்பிடப்பட்ட கருவிகளின் பயன்பாட்டையும் அத்துடன்  பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்றியமையாத முக்கிய நிதியியல் பணிகளுக்கான தடங்கல்களையும் அவதானிக்கின்றது.

இந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகின்ற பகுப்பாய்வுகள் பேரண்ட முன்மதியுடைய பகுப்பாய்வு என அறியப்படுகின்றது. இது, நிதியியல் முறைமையியலிருந்து தோன்றுகின்ற அல்லது நிதியியல் முறைமையினால் விரிவாக்கப்பட்ட கடுமையான சமநிலையற்ற தன்மைகளை மற்றும் அத்தகைய சம்பவங்களிலிருந்து தோன்றுகின்ற இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகளை அடையாளம் காண்பதற்காக நிதியியல் முறைமையை முழுமையாக மதிப்பீடு செய்கின்ற பொருளாதார பகுப்பாய்வு முறையொன்றாகும்.

முறிவடைகின்ற நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான தீர்மானம்

எந்தவொரு மத்திய வங்கியும் அல்லது அரசாங்கமும் நிதியியல் முறைமையின் அனைத்து கொடுக்கல்வாங்கல்களிற்கும் அல்லது நிறுவனங்களுக்குமான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு இயலாதிருப்பினும், ஒட்டுமொத்த நிதியியல் முறைமையும் நிலையுறுதிமிக்கதாக காணப்படுகின்றதை உறுதிப்படுத்துவது மத்திய வங்கியின் முனைப்பாக காணப்படுகின்றது. செயற்படாத நிதியியல் நிறுவனங்கள் ஏதேனும் காணப்படுமாயின், தீர்மானமெடுக்கும் அதிகாரியாக மத்திய வங்கியானது அத்தகைய நிறுவனத்திற்கு பாதுகாப்பாக தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு இடையிட்டு, விரிந்த பொருளாதாரத்தில் அத்தகைய நிறுவனத்தின் தோல்வியின் சாத்தியமான மோசமான விளைவுகளின் தாக்கத்தை குறைக்கின்றது. முறிவடைந்த நிதியியல் நிறுவனங்களால் ஏற்படும் இடையூறுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, முனைப்பான மேற்பார்வை, இடர்நேர்வு கண்காணிப்பு மற்றும் நெருக்கடி முகாமைத்துவம் போன்றவற்றை இலங்கை மத்திய வங்கியின் தீர்மான அணுகுமுறை உள்ளடக்குகின்றது. 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் அதிகாரம் பெற்றுள்ளதால், இலங்கை மத்திய வங்கியானது வரி செலுத்துவோர் மீது சுமையின்றி நிதியியல் நிறுவனங்களை முகாமைசெய்யலாம் என்பதுடன் அதற்குப் பதிலாக பங்காளர்கள் மற்றும் பிணையமல்லாத கடன்கொடுநர்களின் பொறுப்பாக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் தீர்மானக் கட்டமைப்பானது சந்தை ஒழுக்கவியலை வலுப்படுத்துவதற்கும், பொது மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கும் இலங்கையின் நிதியியல் முறைமையின் தாக்குபிடிக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கும் நிர்வாகியொருவரை நியமித்தல், சொத்து பரிமாற்றங்கள், இணைப்புகள் மற்றும் தீர்த்துக்கட்டுதல் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றது.

நிதியியல் சந்தை உட்கட்டமைப்பு மேற்பார்வை

நிதியியல் சந்தை உட்கட்டமைப்பு பொருளாதாரத்தின் சுமுகமான தொழிற்பாட்டில் முக்கிய வகிபாகமொன்றினை ஆற்றுவதுடன் பரந்தளவிலான நிதியியல் உறுதிப்பாட்டினையும் ஊக்குவிக்கின்றது. சந்தையின் பொருத்தமான தொழிற்பாடும் நிதியியல் உறுதிப்பாடும் நிதியியல் உட்கட்டமைப்பினால் வழங்கப்படும் பணிகளின் தொடர்ச்சியான ஒழுங்கான தொழிற்பாட்டிலேயே தங்கியிருக்கின்றது. இடர்நேர்வுகளை கண்காணித்தல், முகாமைப்படுத்துதல் மற்றும் தணித்தல் நிதியியல் சந்தை உட்கட்டமைப்பினை வழங்குபவர்களின் முக்கிய பொறுப்பாகும். 

உட்கட்டமைப்பின் முக்கிய வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கின்றன;

அ. நிதியியல் நிறுவனங்களுடன் தொடர்பான கொடுப்பனவு முறைமைகள்
ஆ. பிணையங்கள் தீர்ப்பனவு முறைமைகள்
இ. மத்திய இணைத் தரப்பினர் போன்ற மற்றையவர்கள் (மத்திய வங்கியின் அதிகார வரம்பிற்குள் வரும் அத்தகைய நிறுவனம் ஏதும் தற்பொழுது இல்லை)

தேவையான பணிகள் தொடர்ச்சியாகக் கிடைப்பதனை சந்தை உட்கட்டமைப்பு வழங்குநர்கள் உறுதிப்படுத்துவதற்கான இயலாற்றலின் மீது சந்தைத் தொழிற்பாடுகள் தங்கியிருக்கின்றன. கொடுப்பனவு முறைமைகள், வியாபாரங்களுக்கும் ஏனைய சந்தைப்பங்கேற்பாளர்களுக்கும் அவர்கள் நுகரும் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான கொடுப்பனவாகவோ அல்லது பணத்தினை அவர்கள் கடனாகப் பெறுவதற்காகவோ அல்லது கடனாக வழங்குவதற்காகவோ அல்லது வெறுமனே கொடுப்பனவுகளை மாற்றல் செய்வதற்காகவோ கொடுப்பனவுகளாக பணத்தினை அனுப்ப அல்லது பெறுவதற்கு வசதியளிக்கின்றன. பிணையங்கள் தீர்ப்பனவு முறைமைகள் பங்குரிமை மூலதனம் அல்லது படுகடன் பிணையங்களின் முதலீட்டு பரிவர்த்தனைகளை இயலச்செய்கின்றன. மத்திய இணைத்தரப்பினர்கள், மூல இணைத்தரப்பினரின் செலுத்த தவறுகைக்கு எதிராக பங்கேற்பாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்குகின்றனர். 

இக்கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் பொறுப்புக்களுக்குப் புறம்பாக, இலங்கை மத்திய வங்கி தற்பொழுது பாரிய பெறுமதியினைக் கொண்ட ரூபா கொடுப்பனவுகளுக்கும் (அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைமை) அரச பிணையங்களுக்கான பிணைய தீர்ப்பனவு முறைமைக்குமான (பத்திரங்களற்ற பிணையத் தீர்ப்பனவு முறைமை) கொடுப்பனவு முறைமைகள் உட்கட்டமைப்பினை வழங்குகின்றது.

நிதியியல் பாதுகாப்பு வலைகள்

வைப்புக் காப்புறுதி என்பது உறுப்பு நிதியியல் நிறுவனம் தமது படுகடன்களைச் செலுத்துவதற்கு இயலாமையினால் ஏற்படும் இழப்புக்களிலிருந்து வைப்பாளர்களைப் பாதுகாக்குகின்ற நிதியியல் பாதுகாப்பு வலை பொறிமுறையொன்றாகும். 2010ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் 2010.10.01 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமாக 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் இயலச்செய்கின்ற ஏற்பாடுகளின் கீழ், இலங்கை மத்திய வங்கி கட்டாய வைப்புக் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் பெயர் 2013ஆம் ஆண்டில் தொடர்ந்துவரும் திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டமாக திருத்தப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நலனில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நிதியியல் நிறுவனங்களின் முறிவடைவிலிருந்து வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை ஊக்குவித்து இதனூடாக> வைப்பாளரின் நம்பிக்கையைப் பேணுவதன் வாயிலாக நிதியியல் நிறுவனங்களின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிக்கின்றது.  

2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினை இயற்றியதுடன், ‘இலங்கையின் வைப்புக் காப்புறுதித் திட்டம் சட்டரீதியாக தாபிக்கப்பட்டு ‘இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமென’ பெயரிடப்பட்டது. வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டவாறு, ஏதேனும் உயர்ந்தபட்ச தொகை வரை வைப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டும், பாதுகாப்பிற்கு உட்பட்டு தீர்மான வழிமுறையாக உரிமம்பெற்ற வங்கியின் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் மாற்றுவதற்கு வசதிப்படுத்தும் வகையில், உரிய நிதியியல் உதவியை வழங்குவதற்கு முறைமையை தாபிக்கும் பொருட்டும், உறுப்பு நிறுவனத்தில் வைப்பாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் வைப்புக்களை காப்புறுதிசெய்யும் இரு பிரதான நோக்கங்களுடன் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் தொழிற்படுகின்றது.  

தற்போது, இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் உறுப்பு நிறுவனங்கள் அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகளை உள்ளடக்குகின்றன. 2021.04.01 அன்று தொடக்கம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் மூலம்/ஆளுகைச் சபையின் மூலம், உறுப்பு நிறுவனமொன்றின் உரிமம் இரத்துச்செய்யப்படுகின்றதுடன் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டமொன்றின், வைப்பாளரொருவருக்கு ரூ.1,100,000 கொண்ட உயர்ந்தபட்ச தொகை வரை தகைமையுடைய வைப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகின்றது.

Environmental and Social Commitment Plan (ESCP)

Stakeholder Engagement Plan (SEP)