நாணயக் கொள்கை
பொதுநோக்கு
நாணயக் கொள்கை என்பது பேரண்டப் பொருளாதார குறிக்கோளான விலை உறுதிப்பாட்டை அடையும் முக்கிய நோக்குடன் பொருளாதாரமொன்றிலுள்ள பணத்தின் நிரம்பல் மற்றும் செலவை மத்திய வங்கி முகாமைப்படுத்தும் செயன்முறையாகும்.
இலங்கையில் நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி பொறுப்பாக இருப்பதுடன் இது முக்கியமாக கொள்கை வட்டி வீதங்களை நிர்ணயித்தல் மற்றும் பொருளாதாரத்தில் திரவத்தன்மையினை முகாமைப்படுத்தல் என்பனவற்றுடன் தொடர்புபட்டதாகும். மத்திய வங்கியின் நாணயத் தொழிற்பாடுகள் பொருளாதாரத்திலுள்ள வட்டி வீதங்களில் செல்வாக்கை ஏற்படுத்துவதுடன் கடன்பாட்டாளர் மற்றும் கடன் வழங்குவோர், பொருளாதார நடவடிக்கைகளிலும் இறுதியாக பணவீக்க வீதத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. ஆகவே, மத்திய வங்கி, பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தி அதனை விரும்பத்தக்க பாதையில் பயணிக்கச் செய்ய நாணயக் கொள்கையினை பயன்படுத்துகின்றது.
விலை உறுதிப்பாடு
விலை உறுதிப்பாடு என்பது பொருளாதாரத்தில் பொதுவான விலை மட்டத்தில் பரந்தளவு தளம்பல்கள் இல்லாததொரு சூழ்நிலையாகும். இது நீடித்த உறுதியான பொருளாதார வளர்ச்சியை எய்த உதவும். விலைகள் குறைந்த வீதத்தில் தளம்பலடையும் பொழுது, அவை பொருளாதார முகவர்களான வீட்டலகுகள் மற்றும் நிறுவனங்களின் பொருளாதாரத் தீர்மானங்களின் மீது குறிப்பிடத்தக்களவில் எந்தவொரு செல்வாக்கினையும் கொண்டிராது. மேலும் விலை உறுதிப்பாடு பொதுமக்களிடையே பணவீக்க எதிர்பார்ப்புக்களைச் சிறந்த முறையில் நிலைநிறுத்த உதவும். இது உண்மையான பணவீக்கத்தினைத் தாழ்ந்த உறுதியான மட்டங்களில் பேணுவதனை இலகுபடுத்தும். ஆகவே, உறுதியான விலைகள், எதனை உற்பத்தி செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பது பற்றிய பொருளாதாரத் தீர்மானங்களை திரிபடையச் செய்யாது, பிறழ்வுபடுத்தாது என்பதனால் பொருளாதாரத்தில் வினைத்திறன் மிக்க மூலவள ஒதுக்கீட்டினை இயலச்செய்து பொருளாதார உறுதிப்பாட்டிற்கும் நீண்ட காலத்தில் பொருளாதாரத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. இதற்கமைய, 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், மத்திய வங்கி, உள்நாட்டு விலை உறுதிப்பாட்டை அடைந்து பேணுகின்ற அதன் முதன்மைக் குறிக்கோளை அனுசரித்த செல்வதில், ஏனையவற்றுக்கு மத்தியில், அதன் சாத்தியமான மட்டத்தில், வெளியீட்டை நிலைநிறுத்துவதையும் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.
நாணயக் கொள்கைக் கட்டமைப்பு
உள்நாட்டு விலை உறுதிப்பாட்டைப் பேணுகின்ற மத்திய வங்கி அதன் முதன்மை குறிக்கோளை அடைவதற்கு நாணயக் கொள்கையை நடத்துகின்றது. இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்கமைவாக, நாணயக் கொள்கையை வகுத்து, நெகிழ்ச்சித்தன்மை கொண்ட செலாவணி வீத முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு நாணயக் கொள்கைச் சபை பொறுப்பாகவுள்ளது. நிதி அமைச்சிற்கும் இலங்கை மத்திய வங்கிக்குமிடையில் நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கையின் மூலம் தீர்மானிக்கப்பட்டவாறு பணவீக்கத்தை இலக்கிடப்பட்ட மட்டங்களில் பேணுவதை நெகிழ்ச்சிவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பு இலக்காகக் கொண்டுள்ளது. 2023 ஒத்தோபர் 5ஆம் திகதி அன்று அரசாங்க வர்த்தமானியில் (இணைப்பு) வெளியிடப்பட்ட தற்போதுள்ள நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கையானது காலாண்டு முதன்மைப் பணவீக்கத்தை 5 சதவீதத்தில் பேணுவதற்கு மத்திய வங்கிக்கு பொறுப்பாணை அளிக்கின்றது.
பணவீக்க இலக்கினை அடைந்துகொள்ளும் பொருட்டு, விரும்பத்தக்க பாதையில் குறுங்கால வட்டி வீதங்களுக்கு வழிகாட்டுவதற்கு மத்திய வங்கி அதன் கொள்கை சாதனங்களைப் பயன்படுத்துகின்றது. மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை சமிஞ்சைப்படுத்துகின்ற முதன்மை நாணயக் கொள்கை சாதனமான ஓரிரவு கொள்கை வீதமானது அவசியமானவிடத்து, பணச் சந்தையில் குறுங்கால வட்டி வீதங்களை வழிப்படுத்துவதற்கு கால முறையாக மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான விதத்தில் சீராக்கப்படுகின்றன. குறுகியகால பணச் சந்தை வட்டி வீதமான சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது நடப்பு நாணயக் கொள்கை கட்டமைப்பின் கீழ் தொழிற்பாட்டு இலக்காக செயற்படுகின்றது. மேலும், விரும்பத்தக்க மட்டங்களில் குறுங்கால வட்டி வீதங்களை வழிநடத்தும் வகையில் உள்நாட்டு பணச் சந்தையில் திரவத்தன்மை நிலைமைகளையும் முகாமைசெய்வதற்கு திறந்த சந்தைத் தொழிற்பாடுகளும் செயற்படுத்தப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை நாளாந்த ஏலங்களில் தமது திரவத்தன்மை தேவைப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு இயலாதிருப்பதங்கு நிதியியல் நிறுவனங்களுக்கென துணைநில் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.
ஓரிரவு கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், அதாவது துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் போன்ற துணைநில் வசதி வீதங்கள் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களாக செயற்பட்டன. முன்னர், மத்திய வங்கியானது நாணய இலக்கிடல் மற்றும் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் ஆகிய இரண்டினதும் அம்சங்களைக்கொண்டு மேம்படுத்தப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பொன்றினுள் மத்திய வங்கி நாணயக் கொள்கையை நடாத்தியது. இக்கட்டமைப்பின் கீழ், மத்திய வங்கியானது பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் நிலைநிறுத்துவதற்கு முயற்சித்தது. தற்போதைய நடைமுறைகளைப் போன்று, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் தொழிற்பாட்டு இலக்காகப் பயன்படுத்தப்பட்டது. 1980களின் தொடக்கத்தில் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை கட்டமைப்பில் நாணயக் கொள்கை இலக்கிடலை தேர்ந்தெடுத்ததுடன் நாணயக் கொள்கை நடத்தையில் முக்கிய பெயரளவு நிறுத்தியாக நாணயக் கூட்டுக்கள் காணப்பட்டன. நாணய இலக்கிடல் கட்டமைப்பொன்றின் கீழ், பண நிரம்பலிலுள்ள மாற்றங்கள் விலை உறுதிப்பாட்டைப் பாதிக்கும் முதன்மையான காரணிகளாகக் கருதப்படுகின்றன. எனினும், பண நிரம்பல் மற்றும் பணவீக்கத்திற்குமிடையிலான வலுவற்ற தொடர்பொன்றுக்கிடையில் பணப் பெருக்கியிலும் வேகத்திலும் ஏற்படும் தளம்பலைக் கருத்திற்கொண்டு, பெயரளவு நிறுத்தியொன்றான நாணய இலக்குகளின் வகிபாகம் நிச்சயமற்றதாக தோற்றம்பெற்று மத்திய வங்கியின் தொடர்பூட்டல் உபாயத்தை சிக்கல்படுத்தி, மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை கட்டமைப்பை தரமுயர்த்துவதற்கு வழிவகுத்தது.