தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 மேயின் 3.5 சதவீதத்திலிருந்து 2019 யூனில் 2.1 சதவீதத்திற்கு குறைவடைந்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் காணப்பட்ட உயர்ந்த தளமே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் இரண்டும் 2019 யூனில் முறையே -0.4 சதவீதத்திலிருந்தும் 6.7 சதவீதத்திலிருந்து -2.9 சதவீதமாகவும் 6.2 சதவீதமாகவும் குறைவடைந்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 யூனில் 2.0 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது.
மாதாந்த மாற்றத்தினைக் கருத்திற்கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2019 யூனில் 0.4 சதவீதத்தினால் அதிகரித்;தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் அவதானிக்கப்பட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே காரணமாக அமைந்தன. உணவு வகையினுள் உடன்மீன், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. இதற்கு மேலதிகமாக, உணவல்லா வகையினுள், போக்குவரத்து; மற்றும் உணவகங்கள், விடுதிகள் துணை வகை விடயங்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரித்தன.