2019 சனவரியில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)  ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2018 திசெம்பரின் 0.4 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 1.2 சதவீதமாக அதிகரித்தது. 2019 சனவரியில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பானது, தளத்தாக்கம் மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்கள் விலைகளின் அதிகரிப்பினால் உந்தப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கம் 2018 திசெம்பரில் பதிவுசெய்யப்பட்ட 4.7 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 6.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. எவ்வாறாயினும்,  ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கமானது 2018 திசெம்பரின் -4.5 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் -4.8 சதவீத்திற்கு மேலும் குறைவடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2018 திசெம்பரின் 2.1 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 1.8 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 

மாதாந்த மாற்றங்களைக் கருத்திற்கொள்ளும் போது தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2019 சனவரியில் 0.2 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு பிரதானமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு காரணமாவதோடு, இவ்வகையில் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணை வகை (வீட்டு வாடகை) உயர்ந்த அளவிலான அதிகரிப்பினைப் பதிவுசெய்திருந்தது. மேலும், வெறியக்குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடைகள் மற்றும் பாதணிகள்; அத்துடன்  தளபாடங்கள் மற்றும் வீட்டுச்சாதனப் பொருட்கள் மற்றும் வழமையான வீட்டுடமைப் பேணல் துணை வகைகளிலுள்ள பொருட்களின் விலைகளும் மாதகாலப்பகுதியில் அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. அதேவேளையில், உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகள் குறைவினைப் பதிவுசெய்ததோடு, இவ்வகையில் மரக்கறிகள், தேங்காய், எலுமிச்சை, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைமிளகாய் என்பன முக்கியமான குறைவினைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2018 திசெம்பரில் 3.1 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 5.1 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. இதேவேளையில், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2018 திசெம்பரில் 2.4 சதவீதத்திலிருந்து 2019 சனவரியில் 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, February 21, 2019