தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், கடந்த ஆண்டில் காணப்பட்ட குறைந்த அடிப்படை மற்றும் உணவல்லா வகைப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாக தூண்டப்பட்டு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 யூனின் 5.3 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 5.1 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.
மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்ளும்போது, உணவல்லா வகைப் பொருட்களின் விலைகளில் குறிப்பாக போக்குவரத்து துணைப் பிரிவின் கீழ் பெற்றோல் மற்றும் டீசல் மற்றும் இதர பொருட்கள் மற்றும் சேவைகள் துணைப்பிரிவின் கீழான சில பொருட்களின் விலைகளின் அதிகரிப்புக் காரணமாக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2018 யூனின் 126.5 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 யூலையில் 126.6 சுட்டெண் புள்ளிகளுக்கு சிறியளவால் அதிகரித்தது. அதேவேளையில், உணவு விடயங்களிலுள்ள பொருட்களின் விலைகள் இம்மாதகாலப்பகுதியில் குறைவடைந்ததுடன் முக்கிய விலை வீழ்ச்சிகளானது, தேங்காய், அரிசி மற்றும் எலுமிச்சம்பழம் போன்றவற்றில் அவதானிக்கப்பட்டது.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூனின் 1.8 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 2.3 சதவீதமாக அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வேர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2018 யூனின் 2.9 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.