2018 யூனில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், உணவு வகைப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாக தூண்டப்பட்டு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 மேயின் 2.1 சதவீதத்திலிருந்து 2018 யூனில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 மேயின் 5.7 சதவீதத்திலிருந்து 2018 யூனில் 5.3 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்ளும்போது, உணவு வகைப் பொருட்களின் குறிப்பாக, மரக்கறிகள், உடன் மீன், பச்சை மிளகாய், மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றின் விலைகளின் அதிகரிப்புக் காரணமாக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2018 மேயின் 124.3 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 யூனில் 126.5 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தது. அதேவேளையில், உணவல்லா விடயங்களினுள் முதனிலை விலை அதிகரிப்பானது போக்குவரத்து வகையில் அவதானிக்கப்பட்டது, இதற்குப் பிரதானமாக பெற்றோல், டீசல் மற்றும் பஸ் கட்டணங்களில் மேல்நோக்கிய விலைத்திருத்தங்கள் காரணமாக அமைந்திருந்தன. 

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 மேயின் 1.7 சதவீதத்திலிருந்து 2018 யூனில் 1.8 சதவீதமாக சிறியளவால் அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வேர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2018 மேயின் 3.1 சதவீதத்திலிருந்து 2018 யூனில் 2.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, July 23, 2018