தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஓகத்தின் 2.5 சதவீதத்திலிருந்து 2018 செத்தெம்பரில் 0.9 சதவீதத்திற்கு 2016 சனவரிக்குப் பின்னர் மிகக் குறைந்ததொரு மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது. செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்தமைக்கு தளத்தாக்கமும் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சியுமே தூண்டுதலாக அமைந்தன. ஆண்டிற்கு ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 ஓகத்தின் 4.7 சதவீதத்திலிருந்து 2018 செத்தெம்பரில் 4.0 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.
மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்ளும்போது, உணவு வகைகளிலுள்ள விடயங்களின் விலைகளில் குறிப்பாக காய்கறிகள், தேங்காய், பச்சைமிளகாய் மற்றும் உடன்மீன் என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2018 ஓகத்தின் 125.4 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 செத்தெம்பரில் 125.4 சுட்டெண் புள்ளிகளுக்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, உணவல்லா வகையில் குறிப்பாக வெறியக்குடிவகைகள் மற்றும் புகையிலை; போக்குவரத்து மற்றும் உணவு விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதி மற்றும் துணை வகைகளில் விலை அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஓகத்தின் 2.7 சதவீதத்திலிருந்து 2018 செத்தெம்பரில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வேர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் 2018 ஓகத்தின் 2.5 சதவீதத்திலிருந்து 2018 செத்தெம்பரில் 2.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.