2018 ஓகத்தில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2018 ஓகத்தில் உணவு விலைகளில் மாதாந்த வீழ்ச்சியினால் தூண்டப்பட்டு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூலையின் 3.4 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்தில் 2.5 சதவீதமாக குறைவடைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 யூலையின் 5.1 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்தில் 4.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்ளும்போது, உணவு வகைப் பொருட்களின் விலைகளில் குறிப்பாக காய்கறிகள், தேங்காய், பச்சைமிளகாய் மற்றும் உடன்மீன் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சியின் பிரதான காரணமாக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2018 யூலையின் 126.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 ஓகத்தில் 125.4 சுட்டெண் புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. அதேவேளையில், உணவல்லா விடயங்களிலுள்ள பொருட்களில் போக்குவரத்துத் துணை வகைகளில் குறிப்பாக பெற்றோல், டீசல் மற்றும் வாடகை ஊர்திகள்; வீடமைப்பில் சில வகைகள், நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்களில்; தளபாடங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபகரண பராமரிப்பு; மதுசார குடிவகைகள் மற்றும் புகையிலை வகைகளில் விலை அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. 

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூலையின் 2.3 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வேர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கமானது 2018 யூலையின் 2.7 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்தில் 2.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, September 21, 2018