2018 மாச்சில் வெளிநாட்டுத் துறை கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. இறக்குமதி மீதான செலவினம் தொடர்ந்தும் அதிகரித்த போதும் 2018 மாச்சில் ஏற்றுமதிகள் வரலாற்றிலே மிகஉயர்ந்த மட்டத்தினை அடைந்ததன் மூலம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களையும்விட குறைந்த வர்த்தகப் பற்றாக்குறைக்குப் பங்களித்தது. 2018 மாச்சில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமையின் மூலம் 2018 சனவரியிலிருந்து அவதானிக்கப்பட்ட சாதகமான போக்கினைத் தொடர்ந்தும் காட்டின. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2018 பெப்புருவரியில் பதிவுசெய்யப்பட்ட வீழ்ச்சிக்கு மாறாக, இம்மாதகாலப்பகுதியில் உயர்வடைந்தன. அதேவேளை சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு மாச்சில், குறிப்பாக, அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை என்பனவற்றிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகள் எடுப்பனவு செய்யப்பட்டமையின் காரணமாக சில வெளிப்பாய்ச்சல்களைக் காட்டின. நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் தொடர்ந்தும் ஆரோக்கியமான மட்டத்தில் காணப்பட்டன.