வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஒத்தோபர் 2017

வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல் என்பனவற்றின் காரணமாக 2017 ஒத்தோபரில் வெளிநாட்டுத்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் காட்டியது. தொடர்ந்து நான்காவது மாதமாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்த உயர்ந்த ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்களவு ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியைத் தோற்றுவித்தன. எனினும், சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் மிதமாக அதிகரித்த வேளையில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மோசமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகளின் காரணமாக தொழிலாளர் பணவனுப்பல்கள் மேலும் வீழ்ச்சியடைந்தன. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் அரச பிணையங்கள் சந்தையிலும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமைக்கிடையிலும் இம்மாத காலப்பகுதியில் சென்மதிநிலுவையின் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் காணப்பட்டன. இவ்வபிவிருத்திகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் சென்மதிநிலுவை 2017 ஒத்தோபர் இறுதியில் ஏறத்தாள ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் கொண்ட திரண்ட மிகையைப் பதிவுசெய்தது. அதேவேளை, 2017 ஒத்தோபர் இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் மட்டம் ஐ.அ.டொலர் 7.5 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மை ஈர்த்துக்கொள்ளப்பட்டமையே காரணமாகும்.

முழுவடிவம்

Published Date: 

Friday, December 29, 2017