இறக்குமதிச் செலவினம் மற்றும் ஏற்றுமதி வருவாய்கள் ஆகிய இரண்டும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2024 பெப்புருவரியில் அதிகரித்தன. இருப்பினும், இறக்குமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பானது ஏற்றுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. மேலும், இறக்குமதிச் செலவினமானது தாழ்ந்தளவிலான எரிபொருள் இறக்குமதி காரணமாக முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்புருவரியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
சுற்றுலாத்துறை, கடல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, மற்றும் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம்ஃவெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளலுடன் தொடர்புடைய பணிகள் என்பவற்றிலிருந்தான வருவாய்களின் நியதிகளில் பணிகள் துறை குறிப்பிடத்தக்களவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது.
தொழிலாளர் பணவனுப்பல்கள்; ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2024 பெப்புருவரி மாதத்திலும் மேம்பாடுகளைத் தொடர்ந்தும் பதிவுசெய்தன.
2024 பெப்புருவரியில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு முதலீடுகள் 2022 பெப்புருவரியிலிருந்தான உயர்ந்தளவிலான மாதாந்த தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை அரச பிணையங்கள் சந்தையிலிருந்து தேறிய வெளிப்பாய்ச்சலொன்று காணப்பட்டது.
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2024 பெப்புருவரி இறுதியளவில் ஐ.அ.டொலர் 4.5 பில்லியனாக விளங்கியதுடன் 2024 மாச்சு 28 வரையான ஆண்டு காலப்பகுதியில் இலங்கை ரூபாவானது ஐக்கிய அமெரிக்க டொலரிற்கெதிராக 7.6 சதவீதத்தினால் உயர்வடைந்து காணப்பட்டது.
2024 மாச்சில் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் பன்னாட்டு நாணய நிதியத்துடன் அலுவலர் மட்ட உடன்படிக்கையொன்று எட்டப்பட்டது.