2018 செத்தெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அழுத்தமொன்றிற்கு உட்பட்டது. வர்த்தகக் கணக்கில் காணப்பட்ட விரிவடைந்த பற்றாக்குறை மற்றும் சொத்துப்பட்டியல் முதலீடுகள் வெளிச்செல்வதற்கு காரணமாக அமைந்த ஐ.அ.டொலர் வலுவடைந்தமை என்பன இம்மாதத்தில் சென்மதி நிலுவையினை மோசமாகப் பாதித்தன. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்து நான்காவது மாதமாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்ட போதும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பை விஞ்சிக் காணப்பட்டது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தையின், வெளிநாட்டு முதலீடுகள் உலகளாவிய நிதியியல் சந்தைகள் உறுதியடைந்தமைக்கு பதிலிறுத்தும் விதத்தில் வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் செத்தெம்பர் மாதத்தில் வெளிநாட்டு முதலீடுகளில் ஒரு சில வெளிப்பாய்ச்சல்களைக் காட்டியது. இதன்விளைவாக ஆண்டின் முதல் எட்டுமாத காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக 5.3 சதவீதத்தினால் தேய்வடைந்த இலங்கை ரூபா செத்தெம்பரில் மேலும் 4.6 சதவீதத்தினால் தேய்வடைந்து உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் மீது அழுத்தமொன்றைப் பிரதிபலித்தது. இவ்வபிவிருத்திகள் செலாவணி வீதத்தில் ஏற்பட்ட மிகையான தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கியின் தலையீட்டினை அவசியமாக்கியது. 2018 செத்தெம்பர் இறுதியில் நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 7.2 பில்லியனாக அமைந்தது. இது 3.8 மாத இறக்குமதிகளுக்கு சமமானதாகக் காணப்பட்டது.
Thursday, November 29, 2018