இலங்கை மத்திய வங்கி, நாணயக் குத்திகளின் வார்ப்புச் செலவினைக் குறைத்தல், நாணயக் குத்திகளின் பாவனைக் காலத்தினை அதிகரித்தல், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தன்மையினை வழங்கல், கட்புல ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இலகுவாக அடையாளம் காணக்கூடிய தன்மையை வழங்கி ஆகியவற்றின் குறிக்கோள்களுடன் ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய முகப்புப் பெறுமதியில் புதிய நாணயக் குத்தித் தொடரை சுற்றோட்டத்திற்கு விட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்திகளைக் கொண்ட பொதி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது.
நாணயக் குத்திகள் 2018 திசெம்பர் 3ஆம் நாளிலிருந்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். இப்புதிய நாணயக் குத்திகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட இதே நாணய இனக்குத்திகளுடன் சேர்ந்து சுற்றோட்டத்திலிருக்கும்.