நிதியியல் ரீதியான ஏமாற்று/ மோசடியாக தகவல்களைப் வழங்கும் மின்னஞ்சல்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாகவிருக்குமாறு இலங்கை மத்திய வங்கி கோருகின்றது

மோசடியான தகவல்களைப் வழங்குகின்ற மின்னஞ்சல்கள்/ சமூக வலைத்தள செய்திகளூடாக பரப்பப்படுகின்ற நிதியியல் ஏமாற்றுகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அண்மைக்கால வருத்தத்திற்குரிய முறைப்பாடுகள் மீது இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. நம்பகமான நிறுவனமொன்றிலிருந்து அத்தகைய மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக ஏமாற்றி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் புகைப்படம், இலச்சினை, இலங்கை மத்திய வங்கியின் மூத்த அலுவலர்களின் பெயர்கள் என்பன மோசடிக்காரர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது. 

cbs.banklanka@asia.com, info@cbsl-lk.com, customercare@cbsl-lk.com போன்ற போலியான மின்னஞ்சல் முகவரிகள் இச்செய்திகளை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. கையடக்கத் தொலைபேசி இலக்கமொன்றின் மூலம் அல்லது குறித்த மிகவும் பிரபல்யமான பன்னாட்டு வர்த்தக நாம ஊக்குவிப்புப் பிரச்சாரமொன்றின் மூலம் பெருமளவிலான வெளிநாட்டு நாணய பணப்பரிசொன்றினை வெற்றிபெற்றுள்ளதாக இம்மின்னஞ்சல்களின் பெறுநர்கள் அறிவிக்கப்பட்டு பரிசினைக் கோருவதற்கு குறித்த பணத் தொகையொன்றினை வைப்புச் செய்யுமாறு தூண்டப்படுகின்றனர். மேலும், பணப்பரிசினை அனுப்புவதற்கான அத்தாட்சி நோக்கங்களுக்காக கடவுச்சீட்டு/ தேசிய அடையாள அட்டை இலக்கங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் போன்றன உள்ளடங்கலாக தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதன் வாயிலாக இம்மின்னஞ்சல்கள பெறுநர்களை ஏமாற்றுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் அத்தகைய வெகுமதித் திட்டங்களுடன் இலங்கை மத்திய வங்கி எவ்விதத்திலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதனை மத்திய வங்கியானது பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது. அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொடர்புடைய சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே அறிக்கையிட்டுள்ளது. எனவே, அத்தகைய நிதியியல் மோசடிகளுக்கு இரையாக வேண்டாம் என்றும் அத்தகைய மின்னஞ்சல்களின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்துவதற்கு சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் கோரிக்கையினை அனுப்பிய தொடர்புடைய நிறுவனத்தினை/ கம்பனியினை முதலில் தொடர்புகொள்வதன் மூலம் அத்தகைய நிதியியல் ரீதியான பரிசுகளின் வாக்குறுதிகள் தொடர்பில் அவதானமாகவிருக்குமாறும் அது மோசடியாக இருப்பதாக அறியப்படுமெனில், விசாரணைகளுக்காக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

Published Date: 

Wednesday, November 14, 2018