அரசியல் யாப்பு ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் நாணயவிதிச் சட்டத்தின் பிரிவு 8(2) (இ) இன்கீழ் மேதகு சனாதிபதியினால் சபைக்கு நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மூன்று புதிய உறுப்பினர்களும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராகப் பணியாற்றும் பொருட்டு கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டனர்.
திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, சனாதிபதி சட்டத்தரணி 2020.02.26ஆம் நாளிலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதுடன் முனைவர். ராணி ஜயமகா மற்றும் திரு. சமந்த குமாரசிங்க ஆகிய இருவரும் 2020.06.29ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:
திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, சனாதிபதி சட்டத்தரணி
திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பணியாற்றும் முதலாவது சனாதிபதி சட்டத்தரணியாக விளங்குகின்றார். தற்பொழுது அவர் நாணயச் சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழுவின் தலைவராக பணியாற்றுவதுடன் இலங்கை மத்திய வங்கியின் ஒழுக்கவியல் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
1992இல் சட்டத்தரணியாக இணைந்துகொண்ட திரு. சஞ்சீவ ஜயவர்த்தன சனாதிபதி சட்டத்தரணி அவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் பிரத்தியேகமாக தொழில்புரிந்து வந்திருப்பதுடன் 2012ஆம் ஆண்டில் சனாதிபதி சட்டத்தரணி என்ற உயர் கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் மேன்முறையீட்டுச் சட்டம், அரசியல் யாப்பு மற்றும் பொதுச் சட்டங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களிலும் விசேடத்துவம் பெற்றவராவார். திரு. ஜயவர்த்தன அவர்களின் சட்டத் தொழிலானது சிவில், குடியியல், ஒப்பந்தம், வர்த்தகம், ஆதனம், வரிவிதிப்பு, வங்கித்தொழில் மற்றும் சட்டம் தொடர்பான ஏனைய பிரிவுகள் உள்ளிட்ட பன்முகத்தன்மையும் வேறுபட்ட துறைகளிலான நிபுணத்துவத்தினையும் உள்ளடக்கியிருந்தது.
திரு. ஜயவர்த்தன இலங்கை சட்ட ஆணைக்குழுவின் ஆணையாளராக முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2015 நியமிக்கப்பட்டதுடன் ஆணைக்குழுவின் புதிய ஐந்தாண்டுகளைக் கொண்ட மேலுமொரு காலப்பகுதிக்காக அண்மையில் மேதகு சனாதிபதி கோத்தபாய அவர்களினால் மீள நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
முன்னர், திரு. சஞ்சீவ ஜயவர்த்தன பிரதம நீதியரசர் திரு. சரத் என் சில்வா சனாதிபதி சட்டத்தரணி அப்போது தலைவராக இருந்த பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய ஆணைக்குழுவின் சட்டக் கொத்தணியின் உறுப்பினர்களிரொருவராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கையின் புலமைச் சொத்து ஆணைக்குழுவிலும் ஒரு நியமனத்தராக முன்னொருபோது இருந்திருக்கிறார். 2004இல் திரு. ஜயவர்த்தன “இலங்கையின் மிகச் சிறந்த இளம் ஆளணியாளர்” என்ற விருதினைப் பெற்றுக்கொண்டார்.
அவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திலிருந்து சட்டத் துறையில் சட்டமானியில் சிறப்புப் பட்டத்தினையும் அதே நிறுவனத்திலிருந்து தத்துவவியலில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தினால் வழங்கப்பட்ட தத்துவ ஆய்வு நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரையினையும் அவர் நிறைவுசெய்திருப்பதுடன் அது சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சட்ட முதுமானி தத்துவவியலின் சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் சட்ட முதுமானி மற்றும் முதுமானி பட்டப் படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் இரண்டிற்குமான பரீட்சகரொருவராகவும் பணியாற்றியிருக்கிறார். அத்துடன் சட்ட பீடத்தின விருந்தினர் விரிவுரைகளையும் ஆற்றியிருக்கிறார். இவர் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் சட்டமானிப் பட்டப்படிப்பின் நிகழ்ச்சித்திட்டத்தின் மதியுரைச் சபையிலும் இருக்கிறார்.
திரு. ஜயவர்த்தனவின் தந்தை, காலம்சென்ற திரு. ஸ்ரான்லி ஜயவர்த்தன அவர்களும் 1989.03.01 இலிருந்து 1994.09.12 வரை நாணயச் சபையில் பணியாற்றியிருக்கிறார்.
முனைவர் (திருமதி) ராணி ஜயமகா
முனைவர் (திருமதி) ஜயமகா இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை மதியுரைக் கணக்காய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் ஓவசீஸ் றியலிட்றி (சிலோன்) லிமிடெட், உபாயக் கற்கைகளுக்கான பிராந்திய மையம் என்பனவற்றின் பணிப்பாளராகவும் மார்க்கா நிறுவகத்தின் ஆளுகைச் சபையினதும் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
முனைவர் ஜயமகா பேரண்ட மற்றும் நாணயப் பொருளாதாரம், மத்திய வங்கித்தொழில், ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை, இ-பண பணியிடல் உட்பட கொடுப்பனவு முறைமைகள் மற்றும் தேசிய மற்றும் பன்னாட்டு மட்டங்களில் நிதியியல் வசதிகளுக்குட்படுத்தல் என்பனவற்றில் 45 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விரிந்த அனுபவத்தினைப் பெற்றவராவார். மத்திய வங்கியாளராக பதவிவகித்த இவர் இலங்கை மத்திய வங்கியில் ஏறத்தாழ 38 ஆண்டுகளாகப் பணியாற்றி நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்குப் பொறுப்பான துணை ஆளுநராக 2009இல் ஓய்வுபெற்றார். அவர் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு முறைமைகளை நவீனமயப்படுத்துவதிலும் தன்னியக்கப்படுத்துவதிலும் கணக்கீடு மற்றும் அறிக்கையிடல் முறைமைகளிலும் முன்னோடியாக மிகப்பெரும் பங்காற்றியிருக்கின்றார். இலங்கை மத்திய வங்கியில் அவர் பணியாற்றிய காலத்தில் நிதி மற்றும் வங்கித்தொழில் மீதான சனாதிபதி ஆணைக்குழுவிற்கு செயலாளராகவும் (இணைப்புச்செய்யப்பட்டிருந்தார்), நிதி அமைச்சின் மதியுரையாளராகவும் ஐக்கிய இராச்சியம் லண்டனில் அமைந்துள்ள பொதுநலவாய செயலகத்தில் விசேட மதியுரையாளராகவும் (பொருளாதாரம்) பணியாற்றியிருக்கின்றார்.
அவர் 2009 இலிருந்து 2015 வரை வங்கித்தொழில் தொடர்பில் சனாதிபதிக்கான மதியுரையாளராகப் பணியாற்றியதுடன் 2011 இலிருந்து 2015 வரை அட்டன் ந~னல் வங்கி பிஎல்சியின் தலைவராகவும் பணியாற்றினார். பன்னாட்டு நிதி மற்றும் வங்கித்தொழில் துறையில் முனைவர் (திருமதி) ஜயமகா உலக வங்கிக் குழுமத்திற்கான தலைமை ஆலோசகராகவும் (தென்னாசியா) வங்காளதேசம், புரூனை, பூட்டான், ஈரான் மற்றும் மாலைதீவுகள் என்பனவற்றின் மத்திய வங்கிகளுக்கான கொடுப்பனவு முறைமைகள் தொடர்பான ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர் உலக வங்கியின் உலகளாவிய கொடுப்பனவுக் குழுமத்தின் உறுப்பினராகவும் ஜி-8 ரெமிடென்ஸ் குழுவின் ஆலோசகராகவும் பன்னாட்டு தீர்ப்பனவிற்கான வங்கியின் பொதுக் கொடுப்பனவு முறைமை வழிகாட்டல் குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
முனைவர் (திருமதி) ஜயமகா “த மணி பைப்லையின் - நிதியியல் உறுதிப்பாட்டின் தூண்” என்ற வெளியீடு உட்பட 35 இற்கு மேற்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு வெளியீடுகளைக் கொண்டிருப்பது அவருக்கு கௌரவமளிக்குமொரு விடயமாகும்.
முனைவர் (திருமதி) ஜயமகா இலங்கை பல்கலைக்கழகம் பேராதனையிலிருந்து பணம் மற்றும் வங்கித்தொழில் துறையில் சிறப்பு கலைமானிப் பட்டத்தினை பெற்றுக்கொண்டார். அவர் பொருளாதாரத்தில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்ரில்லிங் பல்கலைக்கழகத்திலிருந்து டியூனிஸ் “பல்கலைக்கழகத்தின் முனைவர்” பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். அவரது தத்துவ முனைவர் பட்டம் நாணயப் பொருளாதாரத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பிறாட்போட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது.
திரு. சமந்த குமாரசிங்க
திரு. குமாரசிங்க தற்பொழுது இலங்கை, பங்களாதேசம் மற்றும் வியட்நாமிலுள்ள பல கம்பனிகளின் தலைவராகவும் முகாமைத்துப் பணிப்பாளராகவும் அழகுசாதனப் பொருட்கள், புடவை இரசாயனங்கள், வீட்டு துறைக்கான சுத்திகரிப்பு தயாரிப்புக்கள், சேதன உணவு மற்றும் உயிரினவியல் வளமாக்கிகள் போன்ற கைத்தொழில் துறைகளில் தொழிற்படுகின்ற ஏழு கம்பனிகளின் தலைவராகவும் முகாமைத்துப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தற்பொழுது இவர் பொருளாதார மீளெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான சனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினரொருவராகவும் (2020) வலுவூட்டலுக்கான இலங்கை கைத்தொழில் அமைப்பின் தலைவராகவும் (2018 இலிருந்து இன்று வரை) கைத்தொழில் அமைச்சின் அழகுசாதனத் துறை ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் (2016 இலிருந்து இன்று வரை) சனாதிபதி கைத்தொழில் மயப்படுத்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் (2018 இலிருந்து 2019 வரை) இலங்கை காப்புறுதிச் சபையின் சபை உறுப்பினராகவும் (2012 இலிருந்து 2014) கல்வி அமைச்சின் ஒருங்கிணைக்கப்பட்ட பாடவிதானம், பாடங்கள், மற்றும் கல்வியியல் நடவடிக்கைகள் செயன்முறையின் மீளாய்வு என்பனவற்றை நடைமுறைப்படுத்தும் குழுவின் உறுப்பினராகவும் (2013) சனாதிபதி வரிவிதிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் (2009 இலிருந்து 2010 வரை) பணியாற்றியிருக்கின்றார்.
திரு. குமாரசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றிருந்தார். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரசாயனப் பட்டதாரியாக இருந்ததுடன் ஐக்கிய அமெரிக்காவின் ஹார்வாட் பிஸ்னஸ் ஸ்கூலின் பழைய மாணவருமாவார்.
இவர் தனது தொழில்முயற்சியாண்மைப் பணியினை வெறுமனே பன்னிரண்டு ஊழியர்களுடன் 1993இல் ஆரம்பித்ததுடன் “ஆண்டிற்கான தொழில்முயற்சியாண்மையாளர்” என்ற விருதினை 2008இல் பெற்றுக்கொண்டார். நாட்டிற்கான அவரின் பெறுமதி மிக்க பங்களிப்பிற்காக 2019இல் சனாதிபதியின் தேசிய கௌரவ விருதினைப் பெற்றுக்கொண்டார்.