இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளைக் கவனமாக கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. பணவீக்கமானது 5 சதவீத இலக்கினை நோக்கி ஒருங்கிணைவதனை நிச்சயப்படுத்துகின்ற வேளையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலினை அடைவதனை ஆதரவளிக்கின்ற விதத்திலான நடுத்தர கால நோக்கொன்றுடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. முன்னர் எறிவுசெய்யப்பட்டவாறு, தற்போதைய பணச்சுருக்கக் காலப்பகுதியானது நிர்வாகரீதியாக நிர்ணயிக்கப்பட்ட வலு விலைக் குறைப்புக்களின் பாரியளவிலான பெறுபேறொன்றாகக் காணப்படுவதாக சபை அவதானத்தில் கொண்டது. பணவீக்கமானது 2025இன் இரண்டாம் அரையாண்டில் இலக்கிடப்பட்ட மட்டத்தினை நோக்கிச் சீராகுவதற்குத் தொடங்க முன்னர் அடுத்த சில மாதங்களிற்கு இப்போக்கு தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Wednesday, January 29, 2025