2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2008 ஆண்டின் குழுமத்தினுள்ளான பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய தேவையாகவுள்ள மோசமான திரவத்தன்மைப் பிரச்சனைகளுடன் தற்போது காணப்படுகின்றது. வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீள்கட்டமைப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத்தகைய முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. எனவே, தற்போதைய நிலைமையினைத் தொடர்வது கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களுக்கு மேலும் கெடுதல் ஏற்படுத்துவதாகவிருக்கும்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 பெப்புருவரி 08ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் பலயீனமான நிதியியல் செயலாற்றத்தினைக் கருத்திற்கொண்டு, கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 2019 பெப்புருவரி 15ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக வழிமுறைகளாக, பல எண்ணிக்கையான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது. த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் மீள்கட்டமைப்புச் செயன்முறையினை வசதிப்படுத்துவதற்காக புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்வதனை இடைநிறுத்தல், வைப்புக்களின் மீளப்பெறுகைகள் மீதான கட்டுப்பாடுகள், கடன்கள் மற்றும் முற்பணங்களைப் பகிர்ந்தளித்தலைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை முன்மொழியப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் உள்ளடக்குகின்றன.
மீள்கட்டமைப்புச் செயன்முறையினை வசதிப்படுத்தும் பொருட்டு வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிபுணர்கள் குழாமொன்று இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டுள்ளது. கம்பனி, வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களின் முன்மொழிவுகள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு அதனை நிறைவு செய்யமுடியுமென்பதுடன் ஏற்புடைய சட்டங்களுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் அமைவாக இலங்கை மத்திய வங்கி த பினான்ஸ் கம்பனி பிஎல்சியை பொருத்தமான முதலீட்டாளர்களுடன் முன்னெடுப்பதற்கு வசதியளிக்கும். அதேவேளை, கம்பனியின் அனைத்துக் கடன் பெறுநர்களும் தமது நிலுவைகளை கொடுப்பனவு செய்யுமாறு கண்டிப்பாக ஆலோசனை வழங்கப்படுகின்றது. இவ்வழிமுறைகள் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களுக்கு பாரியளவில் உதவியளிக்கும் என்றும் நிதியியல் முறைமையின் பாதுகாப்பினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் உறுதிசெய்யுமெனவும் மேலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை மத்திய வங்கியானது மேலதிக நடவடிக்கைகளை எடுத்துவருவதுடன் கம்பனியின் தொழிற்பாடுகளை மிகவும் அவதானமாக கண்காணிக்கின்றது என்பதனையும் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியானது அறியத்தருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைகளுக்கமைவாக வைப்பாளர்களுக்கான வட்டி நிலுவை வைப்பாளர்களுக்குத் தொடர்ச்சியாகக் கொடுப்பனவு செய்யப்படும். மீள்கட்டமைப்புச் செயன்முறையுடன், காசுப் பாய்ச்சலினை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பான முதலீட்டாளர்களையும் கம்பனியின் மீளெழுச்சியினையும் வசதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தினால் வைப்பாளர் ஒருவருக்கு ரூ.600,000 கொண்ட உயர்ந்தபட்ச தொகையினால் அனைத்து வைப்பாளர்களினதும் நலன்கள் பாதுகாக்கப்படுமென்ற விடயத்தின் மீதும் கவனம் ஈர்க்கப்படுகின்றது. இது, 93 சதவீதமான வைப்பாளர்களின் தொகையினை முழுமையாக உள்ளடக்குவதாகவிருக்கும். எனவே, இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியுடன் ஒத்துழைக்குமாறு வைப்பாளர்கள் வேண்டப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு, 011 2477573, 011 2477229 அல்லது 011 2477504 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கூடாக அல்லது snbfi_query@cbsl.lk என்ற மின்னஞ்சலினூடாக வைப்பாளர்கள் மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தினை தொடர்பு கொள்ளலாம்.