காத்திரமான ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வு அடிப்படையிலான மேற்பார்வையினை நடாத்துவதற்கும் இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தலைமை மேற்பார்வையாளராக செயற்படுவதற்கும் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு என்பவற்றுடன் இலங்கை மத்திய வங்கி 2018 திசெம்பர் 31 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
நிதியியல் குழுக்களை மேற்பார்வை செய்வதற்கு அத்தியாவசியமான கருவியொன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட மேற்பார்வை விளங்குகின்றது. வேறுபட்ட நிதியியல் சார்ந்த துணைத் துறைகள் முழுவதிலும் தொழிற்படுகின்ற நிறுவனக் குழு உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்புகளிலிருந்து தோன்றக்கூடிய குழுக்கள் ரீதியான இடர்நேர்வுகளை மதிப்பிடுவதுடன் இது தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றது. அத்தகைய நிறுவனங்களின் குழு ரீதியிலான ஒருங்கிணைக்கப்பட்ட மேற்பார்வையானது, நிதியியல் முறைமைக்கு அத்தகைய நிறுவனங்களினால் தோற்றுவிக்கப்படுகின்ற கசிவுத்தாக்க இடர்நேர்வு மற்றும் நற்பெயர்சார்ந்த இடர்நேர்வுகளை மதிப்பிடுவதற்கும் கணிப்பிடுவதற்கும் முறைமை சார்ந்த இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அவசியமானதாகும்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களின் முன்னிலையில் மூன்று ஒழுங்குமுறைப்படுத்துநர்களான அதாவது, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் எச். ஏ. கருணாரத்ன, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் திரு. வஜிர விஜெகுணவர்த்தன, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் திருமதி. தமயந்தி பர்ணாந்து ஆகியோர் தமது நிறுவனங்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் அடிப்படையிலான மேற்பார்வை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.