இலங்கை மத்திய வங்கி அதன் 11 ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை 2018 திசெம்பர் 07ஆம் நாளன்று ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது. இம்மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதார கொள்கை தொடர்பான கோட்பாட்டு மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் பல்லினத்தன்மைச் சூழலிலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறிந்த விடயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இவ்வாண்டின் மாநாடானது 'பணவீக்க இலக்கிடல் மற்றும் மத்திய வங்கியின் சுயாதீனம், பொறுப்புக்கூறும்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை" என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் மாநாட்டின் தொடக்கவுரையினை நிகழ்த்தினார். குழுமியிருந்தோருக்கு அவர் ஆற்றிய உரையில், ஆளுநர் பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் துறையின் கொள்கைகளை வடிவமைப்பதில் பொருளாதாரம் மற்றும் சந்தைகளில் அதிகரித்துவரும் சிக்கல் வாய்ந்த தன்மையினை பரிசீலனையில் கொள்ளவேண்டிய அவசியம் பற்றியும் மத்திய வங்கியின் புதிய நாணயக் கொள்கைக் கட்டமைப்பொன்றாக நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலை நோக்கி இலங்கை நகர்வது தொடர்பில் அடையப்பட்ட முன்னேற்றம் பற்றிய சராம்சம் பற்றியும் குறிப்பிட்டார். மாநாட்டின் முக்கிய உரையினை இந்தியப் புள்ளிவிபரவியல் நிறுவகத்தின் பொருளாதார மற்றும் திட்டமிடல் பிரிவின் பொருளியல் பேராசிரியர் செட்டன ஹாட்டே வழங்கினார். இவர் இந்திய றிசேர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினருமாவார். அவரது பிரதான உரை 'நாணய வியாபார சுழற்சி வட்டம்: இந்தியாவிலிருந்தான சான்றுகள்" என்ற தலைப்பில் அமைந்திருந்தது. பேராசிரியர் ஹாட்டே பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலில் வினைத்திறன்மிக்க நாணயக் கொள்கைப் பரிவர்த்தனை பொறிமுறையொன்றின் முக்கியத்துவம் பற்றி பேசினார். விருந்தினர் உரையில் 'பணவீக்க இலக்கிடல் உபாயமொன்றில் செலாவணி வீதத்தின் வகிபாகம்" என்ற தலைப்பில் தென்கிழக்காசியா மத்திய வங்கிகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முனைவர் ஹான்ஸ் ஜென்பேர்க் உரையாற்றினார். முனைவர் ஜென்பேர்க் மத்திய வங்கியின் பொறுப்பாணை இறுதிக் குறிக்கோள்களான பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுடன் பரந்தளவிற்கு இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனவும் செலாவணி வீதம் மத்திய வங்கியொன்றின் இவ்விறுதிக் குறிக்கோளை எய்துவதற்கு உதவிபுரிகின்ற கருவியொன்றாக கருதப்படல் வேண்டுமெனவும் தமது உரையில் குறிப்பிடுகிறார்.