இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தேசமான்ய அமராநந்த சோமசிறி ஜயவர்த்தன அவர்களின் மறைவை அறிவிப்பதில் மத்திய வங்கி ஆழ்ந்த கவலையடைகின்றது. அவர் 2018 மே 29ஆம் திகதியன்று தனது 82ஆவது வயதில் காலமானார்.
தேசமான்ய ஏ.எஸ். ஜயவர்த்தன 1995 நவெம்பர் முதல் 2004 யூன் வரை பதவிவகித்த பத்தாவது ஆளுநராவார். இவர் 1958இல் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து கொண்டதுடன் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளராக (1977-1980) நியமிக்கப்படுவதற்கு முன்னர் செயலகம், தாபனங்கள் மற்றும் பொருளாதார ஆராய்ச்சி ஆகிய திணைக்களங்களில் கடமையாற்றினார்.
1980-1981 காலப்பகுதியில் இவர் ஆளுநருக்கான உதவியாளராகவும் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியதுடன் 1981-1986 வரையான காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தொழிற்பட்டார். இவர் 1986-1989 காலப்பகுதியில் துணை ஆளுநராகப் பணியாற்றியதுடன் 1993-1994 காலப்பகுதியில் மூத்த துணை ஆளுநராகவும் இருந்தார்.
தனது பணியினையும் நிபுணத்துவத்தினையும் பல துறைகளுக்கு வழங்கிய தேசமான்ய ஜயவர்த்தன அவர்கள் மத்திய வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டு பல அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். குறிப்பிடக்கூடிய சில, 1976-1977 காலப்பகுதியில் இவர் இலங்கை வங்கியின் பொது முகாமையாளராகவும் (பிரதம நிறைவேற்று அதிகாரி) மற்றும் 1989இல் மீண்டும் இலங்கை வங்கி மற்றும் இலங்கை மேர்ச்சன்ட் வங்கியின் தலைவராகவுமிருந்தார். 1989-1993 காலத்தின்போது கைத்தொழில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகவும் மற்றும் 1994-1995 காலப்பகுதியில் நிதி திட்டமிடல், இன விவகாரங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார். இவர் 1965-1976 காலப்பகுதியில் இலங்கை பல்கலைக்கழகங்களில் வருகைதரும் பொருளியல் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அறிவுத்திறன்மிக்க புத்திஜீவியான தேசமான்ய ஏ.எஸ். ஜெயவர்த்தன மாத்தளை புனித தோமஸ் கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் 1957இல் தனது பொருளியல் கலைமானி (கௌரவ) பட்டப்;படிப்பினை பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார். 1965இல் இலண்டன் பொருளியல் கல்லூரியிலிருந்து விசேடமாகப் பொதுத்துறைப் பொருளியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினைப் பெற்றதுடன் 1975இல் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிதி தொடர்பாக விசேடமாகக் கற்று அவரது முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது திரு. ஜயவர்த்தன எட்வார்ட் மேசன் உறுப்பினராகவுமிருந்தார். நாட்டுக்கான அவரது சேவையினைப் பாராட்டி 2005ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு 'தேசமான்ய" பட்டம் வழங்கப்பட்டது.
தேசமான்ய ஏ.எஸ். ஜயவர்த்தன அவர்களின் பூதவுடல் இல. 39ஃ1, நெலும் மாவத்தை, சுபத்ராராம லேன், நுகேகொடையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.