இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் பணம் தூயதாக்குதல், இலஞ்சம் அல்லது ஊழல் மற்றும் ஏனைய தொடர்பான குற்றங்கள் பற்றிய புலனாய்வுகள் மற்றும் வழக்குத் தொடுப்புக்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாற்றிக்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கின்றது.
சனாதிபதி சட்டத்தரணியும் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளருமான திரு. சேத்திய குணசேகரவும் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான திரு. கனிஸ்கா விஜயரெட்ணவும் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சார்பிலும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் சுபாணி கீர்த்திரட்ண நிதியியல் உளவறிதல் பிரிவின் சார்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பீ. நந்தலால் வீரசிங்க, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தேசிய இணைப்புக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடுவதற்கு தலைமை தாங்கினார். இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஒழித்தல் செயலணிக் குழுவின் உறுப்பினருமான திருமதி. கே. எம். ஏ. என். டவுலகலவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.