இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமிருந்து கிடைத்த அதிகளவு கோரிக்கைகளையும் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட நாணயத் தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் மாற்றிக் கொள்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகளையும் பரிசீலனையில் கொண்டு, அத்தகைய நாணயத் தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் மாற்றுவதற்கான காலத்தினை 2018 மாச்சு 31 வரை நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் நாணயத் தாள்களை சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் அல்லது உருச்சிதைத்தல் சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கத்தக்க தண்டனைக்குரியவையாகும். நாணய விதிச் சட்டத்தின் 'உ" ஒழுங்குவிதியின் கீழ், வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட நாணயத் தாள்கள் தொடர்பில் கோரல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படலாகாது என்பதுடன், அத்தகைய நாணயத் தாள்கள் இலங்கை மத்திய வங்கியினால் பிடித்து வைத்திருக்கப்படலாம்.
அத்தகைய நாணத் தாள்களை வைத்தருப்பவர் அத்தகைய நாணயத் தாள்களின் முகப்பெறுமதியினை 2018 ஏப்பிறல் 01 இலிருந்து இழக்கவேண்டியிருக்கும்.
இதற்கமைய, இலங்கை மத்திய வங்கி, அத்தகைய நடைமுறைகளிலிருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன் நாணயத் தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்துவது, மாற்றம் செய்வது மற்றும் உருச்சிதைப்பதிலிருந்து விலகியிருப்பதன் மூலம் நாட்டின் சட்ட ரீதியான நாணயத்தின் பெறுமானத்தினையும் பெருமையினையும் பாதுகாத்துக் கொள்ள உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.