2018 ஓகத்தில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் குறைந்தளவில் காணப்பட்டது. இம்மாத காலப்பகுதியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, ஏற்றுமதி வருமானமானது இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை விஞ்சிக் காணப்பட்டமையின் காரணமாக ஓராண்டிற்கு முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சிறிதளவு குறுக்கமடைந்து காணப்பட்டது. அதேவேளை, நடைமுறைக் கணக்கிற்கான ஏனைய உட்பாய்ச்சல்கள் சுற்றுலா மற்றும் சுற்றுலாவிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பு, தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக 2018 ஓகத்தில் தொடர்ந்தும் மிதமானதாகவே காணப்பட்டது. தேறிய அடிப்படையில் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு இம்மாத காலப்பகுதியில் வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தமைக்கு அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டிலுமிருந்து வெளிநாட்டு முதலீடுகள் எடுப்பனவு செய்யப்பட்டமையும் தொடர்ச்சியான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுமே காரணங்களாக அமைந்தன. இவ்வபிவிருத்திகள் ஐ.அ.டொலரின் பரந்த அடிப்படையிலான வலுப்படுத்தல்களுடன் சேர்ந்து செலாவணி வீதம் வீழ்ச்சியடைவதற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை ஏற்படுத்தின. இதனால் செலாவணி வீதத்தில் தேவையற்ற மிகையான தளம்பல்கள் ஏற்படுவதனைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் மத்திய வங்கி தலையிட வேண்டிய அவசியத்தினைத் தோற்றுவித்தது. 2018 ஓகத்து இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 8.6 பில்லியனுக்கு குறைந்தது.