இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் - 2018 ஏப்பிறல்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்திலிருந்து 20.1 சுட்டெண் புள்ளிகள் குறைவடைந்து ஏப்பிறல் மாதத்தில் 45.5 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்வதன் மூலம் சரிவடைந்திருந்தது. முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட உயர் மட்டத்திலான நடவடிக்கைகளை தொடர்ந்து ஏப்பிறல் மாதத்தில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகள் தயாரிப்பு நடவடிக்கைகளை பின்னோக்கி இழுத்தத்துடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. ஏப்பிறல் மாதத்தில் கொ.மு.சுட்டெண்ணில் காணப்பட்ட சரிவிற்கு உற்பத்திகள் மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சரிவுகளே பெரிதும் காரணமாக அமைந்தன. கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் இம்மாதகாலப்பகுதியில் குறைவடைந்திருந்தன. மேலும், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரம் இம்மாதகாலப்பகுதியில் மெதுவடைந்ததுடன் நிரம்பலர்கள் குறைந்தளவில் பரபரப்பாக காணப்பட்டமையினை பகுதியளவில் சுட்டிக்காட்டுகின்றது. புத்தாண்டினை தொடர்ந்து அதிகரித்திருந்த தொழிலாளர்களின் அதிகாரமளிக்கப்படாத விடுமுறைகளின் காரணமாக தயாரிப்பு நடவடிக்கைகளில் இடையூறுகள் காணப்பட்டமையினை பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். மேலும், விசேடமாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையிலுள்ள பதிலிறுப்பாளர்கள் திறன்சார் மற்றும் திறன்சார்பற்ற தொழிலாளர்கள் இரண்டிலுமான ஆட்சேர்ப்பில் காணப்படுகின்ற இடையூறுகளை சுட்டிக்காட்டியிருந்தனர். எவ்வாறாயினும், நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான ஒரு மேம்பாடொன்றினையே குறித்துக்காட்டியது. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு 2018இல் 58.0 சுட்டெண் புள்ளிகளிலிருந்து ஏப்பிறல் மாதத்தில் 53.2 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது புதிய வியாபாரங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவான வளர்ச்சியுடன் பணிகள் துறை நடவடிக்கைகள் அனைத்து காலப்பகுதிக்குமான ஒரு குறைவினை ஏப்பிறல் 2018இல் அடைந்து மெதுவடைந்த வீதத்தில் விரிவடைந்திருந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. முன்னைய இரு ஆண்டுகளில் அவதானிக்கப்பட்டவாறு, மாச்சு மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்பிறல் மாதத்தில் பணிகள் துறைகளில் பொதுவாக ஒரு மெதுவான வளர்ச்சியே உணரப்படுகிறது. புதிய வியாபாரங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் இரண்டிலும் ஏற்பட்ட  மெதுவான வீதத்திலான விரிவாக்கம்,  உண்மை சொத்து, தொலைத்தொடர்பூட்டல் மற்றும் தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறைகளில் பிரதானமாக அவதானிக்கப்பட்டது. சில பதிலிறுப்பாளர்கள் ஏப்பிறல் 2018இல் காணப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விடுமுறைகள் காரணம் என சுட்டிக்காட்டினர். முன்னைய இரு மாதங்களில் அவதானிக்கப்பட்ட போக்கினை தொடர்ந்து நிலுவையிலுள்ள பணிகள் குறைவடைந்திருந்ததுடன் திறந்த வெற்றிடங்களை நிரப்புவதில் காணப்பட்ட தாமதம் காரணமாக தொழில்நிலையும் குறைவடைந்திருந்தது. எவ்வாறாயினும், நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் உறுதியாக நிலைத்திருந்ததுடன் அண்மைக்கால வியாபார தோற்றப்பாட்டில் நம்பிக்கையை பிரதிபலித்தது. பண்டிகை பருவ காலத்திலான உயர்வான கேள்வி, இலங்கை நாணயத்தின் தேய்வு, எரிபொருளுக்கான சமன்பாட்டு விலை நிர்ணய எதிர்பார்ப்புகள் மற்றும் வரி முறையில் ஏற்பட்ட புதிய திருத்தங்கள் காரணமாக பணிகள் துறையில் விதிக்கப்பட்ட விலைகள் அதிகரித்திருந்தன. ஏப்பிறல் 2018இல் சில நிறுவனங்களின் நிலுவையில் காணப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட ஊதிய அதிகரிப்புகளின் பெறுகைகள் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் செலவு மெதுவான வீதத்தில் அதிகரித்திருந்தது.

 

முழுவடிவம்

Published Date: 

Tuesday, May 15, 2018