தயாரிப்பு நடவடிக்கைகள் 2019 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2019 பெப்புருவரியில் மெதுவான வீதத்தில் அதிகரித்தமைக்கு குறிப்பாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான தயாரிப்புநடவடிக்கைகளில் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் குறைவடைந்தமையே முக்கிய காரணமாகும். இவ்வீழ்ச்சிக்கு பெப்புருவரியில் வேலைநாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே முக்கிய காரணமாகும். புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் இணைந்துசெல்லும் விதத்தில் இம்மாதகாலத்தில் கொள்வனவுகளின் இருப்பும் குறைவடைந்தது.
எவ்வாறாயினும், இனிவரும் பருவகால கேள்விகளுக்காக வியாபார நடவடிக்கைகளை உயர்த்தும் பொருட்டு புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் காரணமாக தொழில்நிலையில் சிறிய முன்னேற்றமொன்று காணப்பட்டது. அதேவேளை, நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவு வீதத்தினால் நீடிக்கப்பட்டது. பெப்புருவரியின் தொடக்கத்தில் பொருட்களின் வழங்கல் ஏற்பாடுகளும் சீன புத்தாண்டு பண்டிகை விடுமுறை காரணமாக ஏற்பட்ட வழங்கல் இடையூறுகளும் நிரம்பலர் வழங்கல் நேரத்தை நீடித்திருக்கின்றன. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் நீங்கலான அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 இற்கு மேலான பெறுமதியைப் பதிவுசெய்தன.