இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 ஏப்பிறல்

2019 ஏப்பிறலில், தயாரிப்பு நடவடிக்கைகள், 2019 மாச்சிலிருந்து 25.9 சுட்டெண் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக முன்னெப்பொழுதுமில்லாத விதத்தில் தாழ்ந்த 41.0 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணின் வீழ்ச்சிக்கு உணவு, குடிபானம் மற்றும் புகையிலைத் தயாரிப்பு மற்றும்  புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான நடவடிக்கைகளுக்கான உற்பத்திகள் என்பனவற்றிற்கான புதிய கட்டளைகளிலும் அவற்றின் உற்பத்தியிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. இவ்வீழ்ச்சிக்கு, ஏப்பிறலில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகளும் மற்றும் சுமூகமான தொழிற்சாலை தொழிற்பாடுகளைப் பாதித்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்புக் கரிசனைகளும் காரணங்களாக அமைந்தன. பெரும்பாலான பதிலிறுப்பாளர்கள், குறிப்பாக,  புடவை மற்றும் ஆடைத் துறையில் உள்ளவர்கள் பாதுகாப்பு கரிசனைகளின் காரணமாக தொழிற்சாலைகளின் வேலை நேரங்களை கட்டுப்படுத்தவேண்டியவர்களாக இருந்தமையினையும் விரும்பத்தக்க உற்பத்தி மட்டங்களை எய்தமுடியாமல் இருந்தமையினையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். 

புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையான ஊழியர்கள் தொடர்ந்தும் பணிக்கு வருகைதராமையின் காரணமாக தொழில்நிலையும் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. புத்தாண்டு பண்டிகைக்காலத்தின் இறுதியில் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்கள் முன்னைய மாதத்திலிருந்தே கொண்டுவரப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டமை என்பனவற்றின் காரணமாக கொள்வனவுகளின் இருப்புக்கள் குறைவடைந்தன. நிரம்பலர் வழங்கல் நேரம் உயர்ந்த வீதத்தில் நீடிக்கப்பட்டமைக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அதிகரித்த பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக அமைந்தது. 

கொ.மு.சுட்டெண் தயாரிப்பின் நிரம்பலர் வழங்கல் நேரம் நீங்கலாக அனைத்துத் துணைச் சுட்டெண்கள் நடுநிலையான 50.0 மட்டத்திற்குக் குறைவான பெறுமதியினை பதிவுசெய்து 2019 மாச்சுடன் ஒப்பிடுகையில் 2019 ஏப்பிறலில் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த சுருக்கமொன்றுக்கான சமிக்ஞைகளைக் காட்டின.

 

முழுவடிவம்

 

 

Published Date: 

Wednesday, May 15, 2019